Tuesday, April 22, 2025
தமிழ்

Fact Check

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று உறுதியாகக் கூறினாரா அமைச்சர் சேகர் பாபு?

banner_image

கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளியவர்களுக்கு அறநிலையத்துறை சட்டப்படி முதலில் வாடகைதாரர்களாக மாற்றி பின்னர் காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாக செய்தி ஒன்று வைரலாகிறது.

கோயில்
Source: Facebook

சென்னையில் ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்கிற தனியார் நிறுவனம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் பேடியிடம் அந்நிறுவனம் சார்பில் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

ஜூன் 21 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பேட்டியளித்தார்.
இந்நிலையில், “கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளியவர்களுக்கு அறநிலையத்துறை சட்டப்படி முதலில் வாடகைதாரர்கள் ஆக மாற்றி, பின்னர் காலப்போக்கில் பட்டா வழங்கப்படும்” என்று அமைச்சர் சேகர் பாபு பேசியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படமாட்டாது என்கிற அமைச்சரின் சமீபத்திய பேட்டியைத் தொடர்ந்து இந்த செய்தி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்களும் இதனைச் செய்தியாக பகிர்ந்துள்ளனர்.

கோயில்
Source: Facebook

Facebook Link

கோயில்
Source: Facebook

Facebook Link

Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் உறுதியாகக் கூறியதாகப் பரவும் செய்தியின் பின்னணி என்ன? அவர் உண்மையிலேயே என்ன பேசினார்? என்பது குறித்து ஆய்வு செய்தோம்.

முதலில், பகிரப்படும் அந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆராய்ந்தோம். அது உண்மையான கார்டு என்பது குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கம் மூலமாக உறுதியானது.

தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு பேசிய செய்தியாளர்கள் சந்திப்பு குறித்த வீடியோவை நாம் முக்கியச்சொற்களால் தேடிய போது Red pix 24*7 அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பை முழுமையாக வெளியிட்டிருந்தது.

குறிப்பிட்ட சந்திப்பில், 4:03ல் செய்தியாளர் ஒருவர் “கோயில் நிலங்களில் வசித்து வருகின்ற ஏழை, எளிய மக்களுக்கு அந்த நிலங்களை பட்டா போட்டு கொடுப்பதாக கடந்த ஆட்சியில் 318 அரசாணை எண் வெளியிடப்பட்டது. அறநிலையத்துறை சட்டம் 34 படி, ஏழை எளிய மக்களுக்கு தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் பட்டா போட்டு கொடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “அறநிலையத்துறை சட்டவிதி 78ன் படி கோயில் நிலங்களில் இவ்வாறு நெடுங்காலமாக இருப்பவர்களுக்கு… பட்டா என்பது பிற்காலத்தில் உருவாக்கப்படுவது. உடனடியாக அவர்களை கோயிலுடைய வாடகைதாரர்களாக ஏற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் முதலில் அவர்களை திருக்கோயிலின் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்வதற்கு சட்டம் 78 வழிவகை செய்கிறது. அதனை முழுமையாக அமலில் கொண்டுவந்து அப்படிப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வாடகைதாரர்களாக அவர்களை ஏற்கின்ற பணி தொடரும். இந்த பட்டா என்பதெல்லாம் காலப்போக்கில் வருவதுதான். முதலில் ஆக்கிரமித்துள்ளவர்களை ஒழுங்குபடுத்துவது;ஒழுங்கு படுத்திய பிறகே பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். பட்டா வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படும் என்றே தெரிவித்துள்ளார் என்பது இதன்மூலமாக தெளிவாகிறது. ஆனால், குறிப்பிட்ட அந்த வீடியோவிலும் Thumbnail image பகுதியில் அமைச்சர் சேகர்பாபு கோயில்நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா என்று அறிவித்தது போன்று வைக்கப்பட்டுள்ளது.

Source: YouTube

மேலும், இதுகுறித்து ஜூன் 25 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு, “பட்டா வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. அந்த கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொத்துக்கள் என்பது அந்தக்கால ஜமீன்தார்கள், மன்னர்கள் போன்றவர்களால் வழங்கப்பட்டுள்ள நன்கொடை. அந்த நன்கொடைக்கு பட்டா வழங்குவது என்பது சட்டத்தின் மூலமாக ஆய்வு செய்து முடிவே செய்யப்பட வேண்டிய ஒன்று. அந்த இடங்களில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களை வாடகைதாரர்களாக ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு துறை ரீதியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: YouTube

மேலும், ஜூன் 30 ஆம் தேதியன்று மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு, “திருக்கோயில்கள் நிலங்களைப் பொறுத்தவரையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டத்தில் ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் மட்டும் பட்டா கொடுப்பது குறித்து பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறேனே தவிர எந்த இடத்திலும் நான் திருக்கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. 2015 ஆம் ஆண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அதில் அதிகப்படியான வாடகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பலரும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். நாங்கள் அதையெல்லாம் ஆய்வு செய்தி வாடகைக்கு இருப்பவர்களும் பாதிக்கப்படாமல், கோயிலுக்கும் நியாயமான வருமானம் தடைபடாத வகையில் ஒரு நியாயமான தீர்வைதான் எடுக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source: YouTube

இதுகுறித்து, அமைச்சர் சேகர் பாபுவின் அதிகாரப்பூர்வ தரப்பில் பேசியபோது, “அது தவறான செய்தியாகும். அறநிலையத்துறையின் சட்டப்பிரிவு 78 என்ன சொல்கிறது என்றால், ஆக்கிரமிப்பாளர்கள் அதாவது கோயில் நிலங்களுக்கு எந்தவித வாடகையும் அளிக்காமல் அதனை உபயோகிப்பவர்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. அதன்படி, வாடகை போன்றவற்றை அளிக்காமல் கோயில் நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றி அந்த இடத்தினைக் கோயில் நிலமாக மீண்டும் கைப்பற்றுவது. அதன்பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் G.O ஒன்று வெளியாகியது. அதன்படி, கூட்டு ஆக்கிரமிப்பாளர்கள் அதாவது கிட்டதட்ட 40 முதல் 50 வருடங்களாக கூட்டாக கோயில் நிலங்களில் வீடுகளை அமைத்து குடியிருப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை முறைப்படுத்தி வாடகைதாரர்களாக மட்டுமே மாற்ற முடியும். அவர்களுக்கு எந்த வகையிலும் பட்டா போன்ற எதுவும் அளிக்க வழிவகையில்லை. அவர்கள் பல வருடங்களாக இருப்பதால் அவர்களை ஒன்றிணைத்து குறிப்பிட்ட நிலத்தின் மதிப்பு, நியாய வாடகை எவ்வளவு என்பதையெல்லாம் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறி முறைப்படுத்தலாம். இதைத்தாண்டி, பட்டா என்பதற்கான வழிமுறைகள் எங்கும் இல்லை. நிருபர் ஒருவர் பட்டா குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தரப்பில் இதுகுறித்து சட்ட வல்லுனர்கள், உரிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டது.” என்று விளக்கமளித்தனர்.

எனவே, அமைச்சர் சேகர் பாபு, நிருபர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில் சரியான புரிதல் இன்றி சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பரவியுள்ளது இதன்மூலமாகத் தெளிவாகிறது.

Conclusion:

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் உறுதியாகக் கூறியதாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரப்பப்பட்டு வருகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources:

Tamil Nadu HR&CE Minister Sekar Babu officials report

PK Sekar Babu: https://twitter.com/PKSekarbabu

Redpix: https://www.youtube.com/watch?v=WuTTMcZVRuE

Puthiyathalaimurai: https://www.youtube.com/watch?v=dpeB8iyDQ1M

Section 78 Reference: https://www.indiacode.nic.in/bitstream/123456789/13275/1/TNHR%26CE%20ACT%2C%201959%20-%20revised%20and%20updated.pdf

HR&CE: https://hrce.tn.gov.in/hrcehome/hrce_portalpolicy.php?searchcase=termsofuse

News 7 Tamil: https://www.youtube.com/watch?v=ILQ1CswDVKM

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.