பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஏறக்குறைய 100 நாட்களை கடந்து விட்டது. இந்த 100 நாட்களில் பல புதிய திட்டங்களையும் சலுகைகளையும் திமுக அரசு அற்வித்து உள்ளது. இதில் முக்கியமான திட்டம் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம். இந்த திட்டமானது தமிழக பெண்களுக்கிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து சீமான் அவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறி புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் அந்த நியூஸ்கார்டில், “பெண்களுக்கு பேருந்தில் இலவசம் பயணம் தேவையில்லை. இலவசம் எனில் பெண்களை நின்றபடி பயணிக்க செய்யலாம். இருக்கையில் அமர கட்டணம் விதிப்பதே சரியாக இருக்கும்.” என்று சீமான் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Fact Check/Verification
பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டை பார்க்கும்போதே அது போலியானதுதான் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.
ஏனெனில் புதிய தலைமுறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துரு (Font), லோகோ, வாட்டர் மார்க் போன்றவை இதில் காணப்படவில்லை. மேலும் ஓர் இடத்தில் ‘இலவசம்’ என்பதற்கு பதிலாக ‘இலசவம்’ என்று எழுத்துப்பிழையும் உள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது. ஆயினும் இதை பலர் உண்மை என்று நம்பி பகிர்வதால் இதை முறைப்படி ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முன்னதாக இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் புதிய தலைமுறையில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்,
“வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை.”
என்று விளக்கமளித்தார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்று சீமான் கூறியதாக கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது உறுதியாகின்றது.
ஆயினும் சீமான் எங்கேனும் இவ்வாறு பேசி இருக்கின்றாரா என்பது குறித்து தேடினோம். அதில் சமீபத்தில் நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமான், இலவச பஸ் பாஸ் குறித்து தேவையில்லை என்று பேசியுள்ளதை காண முடிந்தது. ஆனால் அதில் பெண்களுக்கான இலவசப் பேருந்து குறித்து அவர் பேசவில்லை. மாணவர்களுக்கான பஸ் பாஸ் குறித்து மட்டுமே பேசியுள்ளார்.
Also Read: ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டாரா?
Conclusion
பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai News Head’s Testimonial
Samayam Tamil: https://youtu.be/caPuTSlSPSs?t=190
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)