நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “குடியரசுத்தலைவரின் உரை நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் ஆழமாகக் குறிப்பிடவில்லை. தமிழ்நாடு நீட் தேர்வு விலக்கு வேண்டி தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு அதை நிராகரித்தவண்ணமே உள்ளது. உங்களது வாழ்நாளில் தமிழ்நாட்டு மக்களை ஒரு நாளும் ஆளவே முடியாது. இங்கு ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிராக எந்தக் குரலும் சாமன்யர்களால் எழுப்ப முடிவதில்லை. ஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா” என்பதாக காரசாரமாக உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மேலும், தமிழ்நாடு குறித்து பேசியதன் நோக்கம் பற்றிய கேள்விக்கு “நான் ஒரு தமிழன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன? நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பசுக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தாரா நிர்மலா சீத்தாராமன்?
Fact check/Verification
நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டு, நியூஸ் 7 தொலைக்காட்சியின் வடிவில் இருந்ததால் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.
அப்போது, ’’மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனக் கூறுகிறீர்கள். 2021 ஆம் ஆண்டு 3 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது” என்கிற செய்தி அடங்கிய கார்டினை எடிட் செய்தே குறிப்பிட்ட வைரல் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெரிய வந்தது.

Fake Card

Original Card
தொடர்ந்து குறிப்பிட்ட வைரல் கார்டு குறித்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று நமக்கு உறுதி செய்தார்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமாரிடம் குறிப்பிட்ட நியூஸ் கார்டு மற்றும் செய்தி குறித்து கேட்டபோது, அது போலியானது; தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இதுபோன்ற எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை என்று உறுதி செய்தார்.
Conclusion
நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Suresh Kumar NTK
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)