காஸ்மிக் கதிர்கள் இன்றிரவு பூமிக்கு அருகில் கடப்பதனால் இரவு 12.30 முதல் 3.30 வரை உங்கள் செல்போன்களை உபயோகிக்காதீர்கள் என்று புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி தொடர்பான ஆய்வுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்நிலையில், நாசா வெளியிட்டதாகக் கூறி வெளியாகும் பொய்ச்செய்திகளும் நம்மிடையே ஏராளம்.
அவ்வகையில், தற்போது “இன்று இரவு செல்போன்கள் பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால் இன்றிரவு 12.30 தொடக்கம் 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் “NASA” செய்தி அறிவித்துள்ளது.” என்கிற தகவலுடன் கூடிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



ஏற்கனவே சூரியப்புயல், சூரியனின் மேற்பரப்பு புகைப்படம் போன்ற நாசா குறித்த வதந்திகளை நாம் உண்மையறியும் சோதனைக்கு உள்ளாக்கி தெளிவுபடுத்தியுள்ளோம்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
காஸ்மிக் கதிர்கள் இன்றிரவு பூமியைக் கடப்பதால் உங்கள் செல்போன்களை உபயோகிக்காதீர்கள் என நாசா சிங்கப்பூர் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளது என்பதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் பதிவில் உள்ள முக்கிய வார்த்தைகளின் மூலமாக நாம் இணையத்தில் தேடியபோது கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன்பிருந்தே இச்செய்தி பல்வேறு வடிவங்களில் பல நாடுகளிலும் வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது. சிங்கப்பூர் தொலைக்காட்சி மட்டுமின்றி தாய்லாந்து தொலைக்காட்சி, பிபிசி என பல்வேறு தொலைக்காட்சி பெயர்களை உபயோகித்து இத்தகவல் பல காலமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, காஸ்மிக் கதிர்கள் குறித்து நாசாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தேடியபோது, அவ்வாறு எவ்வித எச்சரிக்கைச் செய்தியும் பதிவிடப்பட்டிருக்கவில்லை.
அதுமட்டுமின்றி, காஸ்மிக் கதிர்கள் குறித்த விளக்கமளித்துள்ள The European Space Agency, “புவியின் காந்தப்புலம் மற்றும் புவியீர்ப்பு விசை ஆகியவை அண்டவெளியில் இருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் மற்றும் கதிர்வீச்சுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Space Weather prediction center(NOAA) இதுகுறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற பல்வேறு வதந்திகளுக்கும் நாசா தனது பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ISROச் சேர்ந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “இதுபோன்ற எவ்வித அறிவிப்பும் நாசாவால் வெளியிடப்படவில்லை. மேலும், காஸ்மிக் கதிர்வீச்சு மட்டுமின்றி, பேரண்டத்தில் இருந்து வெளிவருகின்ற எவ்விதமான தாக்குதல்களையும் சமாளிக்கக்கூடிய வெளிப்புறத்தைப் பெற்றுள்ளது நம்முடைய பூமி” என்று தெரிவித்தார்.
Conclusion:
காஸ்மிக் கதிர்கள் இன்றிரவு பூமியைக் கடப்பதால் உங்கள் செல்போன்களை உபயோகிக்காதீர்கள் என நாசா சிங்கப்பூர் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளது என்பதாகப் பரவும் தகவல் போலியானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: Fabricated
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)