Claim: நீட் வழக்கில் தேடப்பட்ட 6 பேர் காங்கிரஸ் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படுபவர்கள் ஜார்கண்டில் வீடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்ற வீடியோவை வைத்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை ஜார்கண்ட் மாநிலம் தியோகர் நகரத்திலிருக்கும் காங்கிரஸ் அலுவலத்திலிருந்தி சிபிஐ கைது செய்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
நீட் வழக்கில் தேடப்பட்ட 6 பேர் காங்கிரஸ் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோவில் ‘ANI’-யின் லோகோ இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. ஆகவே ANI-யின் சமூக ஊடகப் பக்கங்களில் அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் நீட் வழக்கில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகள் பாட்னா LNJP மருத்துவமனையிலிருந்து மருத்துவ பரிசோதனை முடிந்து கொண்டு வரப்பட்டதாக கூறி வைரலாகும் இவ்வீடியோவை ANI-யின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
ANI வெளியிட்டிருந்த இப்பதிவில் இந்த 6 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் நகரத்தில் ஜூன் 21 அன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் “Six arrested from Jharkhand in NEET exam paper leak case” என்று தலைப்பிட்டு இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியை நம்மால் காண முடிந்தது. அச்செய்தியில் நீட் வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் தியோகர் நகரின் எய்ம்ஸ் மருத்துவமனை அருகிலிருந்த வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஆன்மனோரமா உள்ளிட்ட ஊடகங்களிலும் இந்த கைது குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இந்த ஆறு பேரை தியோகர் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அருகிலிருந்த வீட்டிலிருந்து கைது செய்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
- வைரலாகும் வீடியோவில் நீட் வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் இவர்களை காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து அழைத்து வரவில்லை; அவர்கள் பாட்னா LNJP மருத்துவமனையிலிருந்து மருத்துவ பரிசோதனை முடிந்து கொண்டு கொண்டு வரப்பட்டனர்.
- இந்த ஆறு பேரும் தியோகரில் கைது செய்யப்பட்டார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து கைது செய்யப்படவில்லை; எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகிலிருந்த வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
Also Read: பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?
Conclusion
நீட் வழக்கில் தேடப்பட்ட 6 பேர் காங்கிரஸ் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
X post from ANI, Dated June 23, 2024
Report from India Today, Dated June 22, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)