Coronavirus
கொரோனா தடுப்பு மருந்திற்காக மும்பை வந்துள்ள விமானம் எனப் பரவும் தவறான புகைப்படம்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தினை, 2 மில்லியன் டோஸ் அளவிற்கு எடுத்துச் செல்ல பாரதப் பிரதமர் மோடி அனுமதி அளித்ததன் அடிப்படையில் பிரேசில் நாட்டு சிறப்பு விமானம் மும்பை வந்துள்ளது. உலகைக் காக்கும் மோடிஜி அரசு என்பதாகப் புகைப்படம் ஒன்று ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact Check/ Verification:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி, நாடுமுழுவதும் முதற்கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாகத் துவங்கி வைத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அனுமதி அளித்த பின்பு 2 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்தினை எடுத்துச் செல்ல பிரேசில் நாட்டு சிறப்பு விமானம் மும்பை வந்துள்ளது என்பதாகப் புகைப்படம் ஒன்று ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
மும்பையிலிருந்து கொரோனா தடுப்பூசி மருந்தினை எடுத்துச் செல்ல வந்துள்ள பிரேசில் விமானம் என்று பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படத்தை க்ராப் செய்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அத்தேடலின் முடிவில், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட அப்புகைப்படம் காணக்கிடைத்தது.

அதில், ‘பென்சுல்வேனியாவின், பிலடெல்பியா சர்வதேச விமானநிலையத்தில் சரக்குகள் இறக்கப்படும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கார்கோ விமானம்’ என்கிற வார்த்தைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், புகைப்பட உதவி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராய்டெர்ஸ் செய்தித்தளத்தில் குறிப்பிட்ட அவ்விமானத்தின் மற்ற பகுதிகளின் புகைப்படங்களையும் நம்மால் காண முடிந்தது.
மேலும், குறிப்பிட்ட அவ்விமானப் புகைப்படத்தில் விமானத்தின் இறக்கைப் பகுதியில் அமெரிக்க தேசியக் கொடியைக் குறிக்கும் வகையில் சிவப்பு+நீல நிற கோடுகளை நம்மால் காண முடியும்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுடன் இதனை ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம். அதற்கான இணைப்பையும் இங்கே இணைத்துள்ளோம்.


Conclusion:
பிரதமர் மோடி அனுமதி அளித்த பின்பு 2 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்தினை எடுத்துச் செல்ல பிரேசில் நாட்டு சிறப்பு விமானம் மும்பை வந்துள்ளது என்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையில் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
American Airlines: https://www.aa.com/en-us/flights-to-boise
Reuters: https://www.reuters.com/news/picture/vaccine-airlift-delivers-shot-in-the-arm-idUSKBN28H1E7
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)