மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்துக் குடித்தால் கொரோனா வைரஸ் நம் உடலை விட்டு ஓடிவிடும் என்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

Fact check/ Verification:
கொரோனா வைரஸால் ஏற்படும் கோவிட்-19 உலகையே அச்சுறுத்தி வருகின்றது. மேலும், வந்தபின் உயிர்காக்கும் மருந்துகள் எதுவும் இதுவரையில் கோவிட்-19க்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
வருமுன் காக்கும் வகையில், உலக நாடுகள் சிலவும், இந்தியாவும் தடுப்பூசிகளைக் கண்டறிந்து தற்போது மக்களுக்கு பயன்பாட்டிற்கு அளித்துள்ளன.
அவற்றின் தடுக்கும் திறனும் போகப்போகத் தெரியும் என்கிற நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெறும் மிளகு ரசம் குடித்தால் கொரோனா நம்மை விட்டு ஓடிவிடும் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி என்னும் இடத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்துக் குடித்தால் கொரோனாவிலிருந்து எல்லாமே நம்மை விட்டு ஓடிவிடும்’ என்று பேசியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இக்கருத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
அமைச்சர் கூறுவதுபோல மிளகு ரசம் வைத்துக் குடித்தால் கொரோனா உடலைவிட்டு ஓடிவிடுமா என்பது குறித்து அறிய உலக சுகாதார நிறுவனத்தின் பக்கத்தில் ‘கோவிட்-19’ தடுப்பு மருந்துகள் குறித்துப் பார்த்தோம்.
அதில், மித் பஸ்டர் என்னும் இடத்தில் ‘மிளகு, மிளகாய் போன்று உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்கள் கொரோனா வைரஸிலிருந்து தடுக்கவோ, இல்லை குணப்படுத்தவோ செய்யாது’ என்கிற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என்று கடந்த சில மாதங்களாக கொரோனாவிற்கு அளிக்கப்பட்டு வருகின்ற சிகிச்சை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கோவிட்-19 ஐ குணப்படுத்துகிறதே தவிர, எந்த ஒரு மருத்துவ முறையிலும் இது வரையில் முழுமையான மருந்து கண்டறியப்படவில்லை. மேலும், சுயமருத்துவமும் செய்து கொள்ளாதீர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மிளகு, பூண்டு, சுக்கு போன்ற நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களைப் பொருத்த வரையில் அவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. `Central council for research in siddha’வின் வெளியீடு ஒன்றில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு எதிராக மிளகு செயல்பட்டாலும் கூட, கொரோனா வைரஸை அது உடலில் இருந்து விரட்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

போலவே, பூண்டு, சுக்கு போன்றவையும் உடலின் எதிர்ப்பாற்றலை மட்டுமே அதிகரிக்கூடிய மருத்துவ உணவுப் பொருட்கள் என்றாலும் கூட கொரோனாவிற்கு அழிவை உண்டாக்கும் மருந்துகள் அவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
Conclusion:
மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் உடலில் இருந்து கொரோனா வைரஸ் ஓடிவிடும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறிய கருத்துக்கு எவ்வித அறிவியல் ரீதியான ஆதாரங்களும் இல்லை என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.
Result: Misleading
Our Sources:
Shilpa Nair: https://twitter.com/NairShilpa1308/status/1348974358006431746?s=20
Organic India: https://organicindiausa.com/blog/the-power-of-pepper-in-ayurveda/
Siddha Council (Ayush Ministry): https://siddhacouncil.com/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)