Fact Check
சீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா?

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விண்வெளியில் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.
அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அது பூமியின் எந்த பகுதியில் விழும் என்று கூற முடியாத சூழல் இருந்தது.
ஆனால் தற்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த சீன ராக்கெட் தமிழகத்தின் தென்காசி அருகே விழும் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/aCf3D

Archive Link: https://archive.ph/SFeEV

Archive Link: https://archive.ph/mLWbp
சீன ராக்கெட் ஒன்று தமிழகத்தின் தென்காசி பகுதிகளில் விழவிருக்கின்றது என்று தகவல் பரவியதைத் தொடர்ந்து இது உண்மைதானா என்பதை அறிய இத்தகவல் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பொதுவாக ராக்கெட் ஏதேனும் விண்வெளியிலிருந்து விழுந்தால், அது கடலபகுதிகளிலோ, மலைப் பகுதிகளிலோதான் விழும். ஆனால் இம்முறை அது நிலப்பரப்பில் விழப் போகிறது, அதுவும் தமிழகத்தின் கடைக் கோடியிலுள்ள் தென்காசி பகுதியில் விழப் போகின்றது என தகவல் பரவும்போதே இது நிச்சயமாக பொய்யான ஒரு செய்தியாகத்தான் இருக்க முடியும் என்று நமக்கு தோன்றியது.
ஆயினும் இத்தகவலை உண்மை என்று நம்பி சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இச்செய்தி குறித்து முறைப்படி ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.
முதலில் இச்செய்தி குறித்த முக்கிய வார்த்தைகளை கூகுளில் இட்டு இதுத் தொடர்பான செய்திகள் ஏதேனும் கிடைக்கின்றதா என்பதை பார்த்தோம்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக ஊடகங்களில் வந்த செய்தி நம் கண்ணில் பட்டது.

இதுக்குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அதை இங்கே, இங்கே காணலாம்.
மேலே கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகின்றது.
ஆயினும் இந்த பொய் செய்தி நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்டைபயன்படுத்தி பரப்பப்படுவதால் இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 7 தமிழில் வெளிவந்துள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இதில், சீன ராக்கெட் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் தவறானது என நியூஸ் 7 தமிழ் விளக்கமளித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False/Altered
Our Sources
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/posts/4602281413167364
BBC Tamil: https://www.bbc.com/tamil/global-57045612
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)