வந்தச் செய்தி:
(PM Narendra Modi inaugurated Asia’s largest 750 MW REWA Solar Power Plant in REWA city of Madhya Pradesh.)
பிரதமர் நரேந்திர மோடி 750 மெகாவாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய ரேவா சோலார் மின்தளத்தை மத்தியப் பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.

சரிப்பார்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 10ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ரேவா அல்ட்ரா மெகாவாட் மின்சார உற்பத்தித் திட்டத்தை துவங்கி வைத்தார். இங்கு 750 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும், இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் திட்டம் என்றும் பிரதமர் கூறி இருந்தார்.
இச்செய்திக் குறித்து பலர் சமூக வலைத் தளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஸ்மிதி இராணி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இதுத் தொடர்பாக தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.
பல முன்னணிப் பத்திரிக்கைகளும் இதுக் குறித்து செய்திகள் வெளியிட்டிருந்தன.
ஆனால் ஆசியாவிலேயே இதுதான் மிகப்பெரிய சோலார் திட்டமா? என்று கண்டறிய நியூஸ் செக்கர் சார்பில் நாம் ஆராய்ந்தோம்.
உண்மைத் தன்மை:
மத்தியப் பிரதேசத்தின் ரேவா அல்ட்ரா மெகாவாட் சோலார் மின்சாரத் திட்டம்தான் ஆசியாவிலேயே பெரியதா என்பதை அறிய நாங்கள் கூகுளில் தேடினோம். அப்போது நமக்கு சில விஷயங்கள் கிடைத்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில், இந்த மின் நிலையமானது இந்தியாவில் ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சோலார் மின் நிலையங்களில் ஒன்றேயொழிய ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் நிலையம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரேவா சோலார் மின் நிலையத்தைக் காட்டிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பத்லா சோலார் மின் நிலையமும், கர்நாடகத்தின் டும்குர் மாவத்திலுள்ள பாவகடா சோலார் மின் நிலையமும் பெரியது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் இம்மின் நிலையங்கள் முறையே 2245 மெகாவாட்கள், 2050 மெகாவாட்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
புளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபினான்ஸின் அறிக்கைப்படி, ரேவாவைக் காட்டிலும் பெரிய சோலார் மின் நிலையங்கள் இன்னும் ஒன்பது இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்கியுள்ளது.

இந்தக் கூற்றை ஆதரிக்கும் விதமாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே. சிவக்குமார் டிவிட்டரில் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில்,
மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட்கள் உற்பத்தி செய்யும் சோலார் மின்நிலையத்தை ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் நிலையமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக மாநிலத்தின் பாவகடாவில் 2000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் மின் நிலையத்தை வெறும் மூன்று ஆண்டுகளில் கட்டமைப்பு செய்து, அது 2018 ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்துக் கொண்டிருக்கிறதே அதை என்ன கூறுவீர்கள்? என்று கேட்டுள்ளார்.
பாவகடாத் திட்டம் நிறைவேற்றும்போது கர்நாடக மாநிலத்தின் எரிசக்தி அமைச்சராக டி.கே.சிவக்குமார் அவர்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
ரேவா அல்ட்ரா சோலார் மின் நிலையம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்ற பிரதமரின் கூற்றானது முற்றிலும் தவறானது என்று நம் விரிவான ஆய்வுக்குப் பின் தெளிவாகிறது.
Sources:
- Google search
Result: False
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது எங்கள் இணையத்தளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)