Authors
Claim: இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றார்.
Fact: இத்தகவல் தவறானதாகும். இச்சம்பவமானது ஜெருசலேமில் நடக்கவில்லை; ஸ்வீடனில் நடந்துள்ளது. சிறுவனிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டவர் இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி அல்ல; ஸ்வீடன் ரயில்நிலைய பாதுகாப்பு அதிகாரியாவார். இச்சம்பவத்தில் அச்சிறுவன் இறக்கவில்லை.
“சனிக்கிழமையன்று ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு நடந்த போராட்டத்தின் போது இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி ஒரு பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றார். அப்பாவி சிறுவன் இறப்பதற்கு முன்பு கலிமாவை படித்தான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அத்தகவல் குறித்து ஆராய்ந்தோம்.
இத்தேடலில் “Subway security guard wrestles and chokes 9 year old child for riding without ticket” என்று தலைப்பிட்டு ‘my chen’ எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் இவ்வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது பிப்ரவரி 16, 2015 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது.
இவ்வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் ஸ்வீடனிலிருக்கும் மாம்லோ நகரத்தின் ரயில்வே நிலையத்தில் 9 மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சிறுவர்களுக்கு ஸ்வீடிஷ் மொழி புரியததால் பாதுகாவலர்களிடன் அவர்களால் உரையாட முடியவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ‘Swedish train station security guards for ‘assaulting’ young boy’ என்று தலைப்பிட்டு இண்டிபெண்டன்ட் ஊடகத்தில் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
9 வயது சிறுவனுக்கு எதிரான வன்முறை வீடியோ வைரலானதை தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய பாதுகாப்பு காவலர்களை ஸ்வீடன் போலீசார் விசாரித்ததாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவமானது மால்மோ ரயில்நிலையத்தில் நடந்ததாகவும், அச்சிறுவர்கள் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணித்ததால் அவர்களை பாதுகாவலர்கள் ரயிலிலிருந்து இறக்கியதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களில் இவ்வீடியோ குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அவற்றிலும் மேற்கண்ட தகவல்களே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து தேடியதில் இச்சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு இல்லத்தில் விடப்பட்ட இச்சிறுவர்கள் அங்கிருந்து தப்பியதாகவும், டென்மார்க்கில் மீண்டும் அவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது.
Also Read: அமெரிக்க டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி பாலஸ்தீனிய சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
வைரலாகும் வீடியோவில் கூறப்படுவதுபோல் இச்சம்பவமானது ஜெருசலேமில் நடக்கவில்லை; ஸ்வீடனில் நடந்துள்ளது. சிறுவனிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டவர் இஸ்ரேலிய போலீஸ் அதிகாரி அல்ல; ஸ்வீடன் ரயில்நிலைய பாதுகாப்பு அதிகாரியாவார்.
இச்சம்பவத்தில் அச்சிறுவன் இறக்கவில்லை. இதன்பின் அவன் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கேயும் தப்பி, டென்மார்க்கில் பிடிபட்டுள்ளான்.
இந்த உண்மைகளானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video By My Chen, Dated February 16, 2015
Report By Independent, Dated February 12, 2015
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே ஜனவரி 03, 2023 அன்று பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)