Fact Check
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அவமதித்தாரா ஜோ பைடன்?
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவமதித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று (24/05/2022) நடைபெற்றது. இந்நிகழ்வின்போது பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டுக்கொள்ளாமல் அவமதித்தார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவமதித்ததாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் இவ்வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 4 நாட்டு தலைவர்களும் ஒன்றாக புகைப்படம் எடுக்க கூடியபோது நடந்ததாகும். இந்நிகழ்வின் முழு வீடியோவை அசோசியட்டட் பிரஸ் வெளியிட்டுள்ளது.
அசோசியட் பிரஸ் வெளியிட்ட வீடியோவில், பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பானீசும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நோக்கி செல்லும்போது இருவரையும் கை தூக்கி பைடன் வரவேற்கிறார். பின்னர் இம்மூவருக்கும் இடையே உரையாடல் நடக்கின்றது. உரையாடலின்போது மோடியை பார்த்து பைடன் சிரிக்கின்றார். இதனைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமருடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். இதுவே அவ்வீடியோவில் காணப்பட்டது.
இவ்வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் நறுக்கி, பிரதமரை ஜோ பைடன் அவமதித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
நாம் தொடர்ந்து தேடுகையில், ‘பிரதமர் மோடியை மறுபடியும் சந்திப்பதில் பெருமை அடைகிறேன், ஜனநாயகத்தை தொடர்ந்து வழங்கி வருவதற்கு நன்றி’ என்று மோடி குறித்து ஜோ பைடன் குவாட் உச்சி மாநாட்டில் பேசியதை காண முடிந்தது.
இதனையடுத்து பிரதமரும் அமெரிக்க அதிபரும் இருதரப்பு சந்திப்பு ஒன்றை நடத்தி, உரையாடிய வீடியோ ஒன்றையும் காண முடிந்தது.
Also Read: கர்நாடக அரசு லூலூ ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்றாரா அண்ணாமலை?
Conclusion
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவமதித்ததாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Missing Context/False Context
Source
Youtube Video Published by Associated Press, on 24 May 2022
Youtube Video Published by Hindustan Times, on 24 May 2022
Youtube Video Published by Narendra Modi, on 24 May 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)