Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்து சென்ற தொண்டர்கள் என்பதாக புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நடைமுறைக்கு திராவிடக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு கோட்டாச்சியர் தடை விதித்திருந்தார்.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்வுக்கு தடை விதித்ததற்கும் பல்வேறு தரப்புகளிலும் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ”இந்த தருதலையை சுமக்கலாம். ஆதீனத்தை சுமக்க கூடாதாம்?” என்பதாக திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியை தொண்டர்கள் சிலர் பல்லக்கில் வைத்து சுமப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று கூறினாரா தருமபுரம் ஆதீனம்?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்து சென்றதாக பரவுகின்ற புகைப்படத் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி செல்வது பல்லக்கில் அல்ல; குதிரை வண்டியில் என்பது நமக்கு உறுதியானது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிட கழகத்தின் மாணவர் பிரிவு பவள விழாவின் மாநில மாநாட்டு அணிவகுப்பின்போது கி.வீரமணியை குதிரை வண்டி ஒன்றில் அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
இதுகுறித்த புகைப்படங்கள் திராவிடக் கழகத்தின் சார்பில் விடுதலை நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகும் புகைப்படம் கீற்று இணைய இதழில் வெளியாகிய “சாராட்டு வண்டியில் போன சுயமரியாதை” என்கிற கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

“சாரட் வண்டிகள் ஒரு நாள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம் பின்னால் அணிதிரண்டவர்கள், அடுத்த தலைமுறைக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் பரவாயில்லை.” என்பதாக அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 26 ஜூலை 2018 அன்று விகடன் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, “குதிரை வண்டியில் நான் ஏறி வந்ததால், குதிரைக்கு வலி வந்துவிட்டது என்று சொன்னால்கூட அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஏன் வலி வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், பேரணி, ஊர்வலம், கோஷங்கள் எல்லாமே ஒரு வகையான பிரசார உத்தி. ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்காகச் சிறைசென்ற பெரியார் விடுதலையானபோது, சிதம்பரத்தில், தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். அந்தக் காட்சியை வர்ணித்துதான் ‘அவர்தாம் பெரியார்’ பாடலை இயற்றினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இப்போது குடந்தையில், 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாட்டில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ‘பொது ஒழுக்கத்தோடு நடப்போம்’, `சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்’ என்பது உள்ளிட்ட 10 உறுதிமொழிகள் மாநாட்டில் எடுக்கப்பட்டன. கட்டுப்பாட்டுடன் திரண்டெழுந்த இந்த மாணவர் எழுச்சி பற்றிய சிறப்புச் செய்திகளை எல்லாம் மறைக்கவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். ‘பல்லக்கில் பவனி வந்தார்’ என்று மோசடியாகச் சித்திரித்து பரவவிட்டுள்ளனர்.
1995 ஆம் ஆண்டு, கன்ஷிராம், மாயாவதி தலைமையில், உத்தரப்பிரதேசத்தில் ‘பெரியார் மேளா’ கொண்டாடப்பட்டது. இந்தியா முழுக்கப் பரவிய இந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றே, அப்போது ‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்று கிளப்பிவிட்டார்கள். இதையடுத்து, ‘பிள்ளையார் பால் குடிக்க முடியுமா? பால் குடித்தது உண்மையா? பால் குடித்தது சரியா?’ என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இது காலங்காலமாக அவர்கள் செய்துவரும் உத்தி; காலாவதியான உத்தி!” என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இதுகுறித்து திராவிடர் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசியபோது, “அவர் உண்மையில் அமர்ந்து வந்தது ஒரு குதிரை வண்டி. ஆனால், பல்லக்கு என்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பல்லக்கில் சுமந்து சென்றதாக பரவுகின்ற புகைப்படத் தகவல் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 7, 2023
Ramkumar Kaliamurthy
November 21, 2022