Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் மறுப்பு. முன்பெல்லாம் இக்கொள்கையை எதிர்த்தோ அல்லது மறுத்தோ பொதுவெளியில் யாரும் பேசியதில்லை.
ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்நிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. அதுவும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியப்பின் இந்த மாற்றம் வேகமெடுத்தது என்று கூறினால் அது மிகையாகாது.
இதன்பின் ஆரியம், திராவிடம், பார்ப்பனியம் போன்றச் சொற்கள் அரசியல் அரங்கில் தொடர்ந்து ஒலித்து வருகின்றது. ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கொள்கை, தனித்தனி நிலைப்பாடுகள் இருப்பது தவறில்லை. ஆனால் உலகில் நிகழும் ஒவ்வொரு விஷயத்தையும் தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றி, மடக்கி பேசும் யுக்தி ஏற்புடையதல்ல.
சமீபத்தில் உலக அரங்கையே தன்பால் திருப்பி வைத்திருந்த நிகழ்வு அமெரிக்க அதிபர் தேர்தல். இத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் இதிலும் இவரின் சாதியை முன் நிறுத்தி பல விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இவர் மாட்டுக்கறியை உண்டார் எனும் ஒரு கருத்தைக் கூறி, ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்து மக்கள் மாட்டைக் கடவுளுக்கு நிகராகப் பார்க்கிறார்கள். ஆகவே மாட்டுக்கறி உண்பது பாவம் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். இந்நிலையில்தான் கமலா ஹாரிஸ் குறித்து இவ்வாறு ஒரு செய்தி பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்டார் என்று பரவும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இவர் இறைச்சி உண்ணுமாறு உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் கமலா ஹாரிஸின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதற்கு தொடர்புடைய வீடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது. “Finally got my pork chop!” என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை அவர் பதிவிட்டிருந்தார்.
இதன்படி பார்த்தால் கமலா ஹாரிஸ் உண்டது மாட்டுக்கறி அல்ல, பன்றிக்கறி என்பது தெளிவாகிறது. ஆகவே சமூக வலைத்தளங்களில் கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்டார் என்று பரப்பப்படும் கூற்று முற்றிலும் தவறானது என்பது உறுதியாகிறது.
கமலா ஹாரிஸ் மாட்டுக்கறி உண்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதையும், அவர் உண்டது மாட்டுக்கறி அல்ல, பன்றிக்கறி என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விரிவாக விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Twitter Profile: https://twitter.com/amrillu/status/1325387370301042688
Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=766851337488803&set=a.216968299143779
Twitter Profile: https://twitter.com/tamilanntk/status/1325668161325158400
Twitter Profile: https://twitter.com/dewTwt/status/1325377587011411968
Ms.Kamala Harris: https://twitter.com/kamalaharris/status/1160619350434492417?lang=en
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)