Fact Check
இந்துக் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதா கீழக்கரை பள்ளிவாசல்?
கீழக்கரை பள்ளிவாசல், இந்துக்களின் கோயிலான ஆதிசிவன் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்கிற பெயரில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check/Verification:
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அமைந்துள்ள பள்ளிவாசல், பல நூற்றாண்டுகள் பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழக்கரையின் ஜும்மா மசூதி, பழமையான பள்ளிவாசலாக புகழ்பெற்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே `கீழக்கரை மசூதி, முன்பு இந்துக் கோயிலாக இருந்தது. பின்னர், இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது’ என்கிற கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், அது தொடர்பான புகைப்படங்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்:
கீழக்கரை இஸ்லாமியப் பள்ளிவாசல், இந்துக்கோயிலை அழித்துக் கட்டப்பட்டது என்கிற பெயரில் பரவுகின்ற புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் மூலமாக ஆராய்ந்தோம்.
நமது ஆய்வின் முடிவில், இந்த புகைப்படங்களும் செய்தியும் கடந்த 2019ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருவதை நம்மால் காண முடிந்தது.
மேலும், இந்த மசூதி குறித்து 2018ம் ஆண்டு பிபிசி தமிழ் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் நம்மால் கண்டறிய முடிந்தது.
அந்த கட்டுரையின்படி, “கீழக்கரையில் அமைந்துள்ள இந்த ஜும்மா பள்ளிவாசல், 17ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதியிடம் அமைச்சராக இருந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதியால் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டது” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமியத்தைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதிக்கும், இந்து மன்னரான கிழவன் சேதுபதிக்கும் இடையே இருந்த நட்பானது இரண்டு மதங்களையும் சேர்த்து மக்களையும் இணைத்துள்ளது என்று இக்கட்டுரையில் சமூக அறிவியல் ஆய்வாளார் பெர்னார்ட் டி.சாமி தெரிவித்துள்ளார்.
சாதி, மத வேறுபாடுகளைப் புறந்தள்ளும் வகையில் அமைச்சர் வள்ளர் சீதக்காதி, கோயிலில் உள்ள திராவிடக் கட்டிடக்கலை பாணியை பள்ளிவாசல்களிலும் அமைத்துள்ளார். இந்துக் கோயில்களில் அமைந்துள்ள தூண்களின் சிலைகளைத் தவிர்த்து, பூவேலைப்பாடுகள் மட்டும் கீழக்கரை பள்ளிவாசலில் கட்டிடக்கலைக்குச் சான்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான வீடியோ ஒன்றையும் நம்மால் யூடிபில் காண முடிந்தது.
மேலும், கீழக்கரை பள்ளிவாசல் குறித்த நடிகர் ராஜ்கிரண் அவர்களின் பேட்டி ஒன்றின் இணைப்பினையும் இங்கே கொடுத்துள்ளோம். மேலும், ’மாமன் மச்சான் உறவைச் சொல்கிறது வரலாறு’ என்கிற பேட்டி ஒன்றும் நமக்குக் காணக்கிடைத்தது.

மேலும். பிபிசியின் கட்டுரையிலேயே ஜும்மா பள்ளிவாசலின் ஒன்பதாவது காஜியான காதர் பாட்சா ஹூசைன் ஸித்திக் என்பவர், கோயில்களில் இருக்கும் சிலைகளுக்கு பதிலாக, பள்ளிவாசல் தூண்களில் பூ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கும், பள்ளிவாசலுக்கும் பொதுவாக திராவிடக் கட்டிடக்கலை அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
அதே கட்டுரையில், கிழவன் சேதுபதி பரம்பரை விழுதான ராணி லட்சுமி குமரன் சேதுபதி என்பவரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
”கிழவன் சேதுபதி மற்றும் வள்ளல் சீதக்காதி இடையிலான நட்பு அவர்களோடு முடியவில்லை. இரண்டு மதங்களை சேர்ந்தவர்கள் என்ற எந்த வித்தியாசமும் எங்களுக்கு இடையில் இல்லை. குடும்ப உறவுகளாகவே நாங்கள் பழகிவருகிறோம் என்பதால், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நட்பு தொடர்கிறது,” என்ற அவரது வார்த்தைகளை நியூஸ்செக்கர் சார்பில் நமது வாசகர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
conclusion:
எனவே, கீழக்கரை இஸ்லாமியப் பள்ளிவாசல், இந்துக்களின் ஆதிசிவன் கோயிலை அழித்து அதன்மீது கட்டப்பட்டது என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என்பதையும், மத நல்லிணக்கத்தை பரப்பும் வகையில் நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்ட பள்ளிவாசல் அது என்பதையும் நியூஸ்செக்கர், வாசகர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
இதுபோன்ற, சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலான தகவல்களை வாசகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Result: Misleading
Our Sources:
BBC Tamil: https://www.bbc.com/tamil/india-44930287
Youtube: https://www.youtube.com/watch?v=mnhFuXYpG6w&feature=emb_logo
Twitter: https://twitter.com/AAN_THAMIZH/status/1294214661613608960?s=20
Hndu Tamil: https://www.hindutamil.in/news/literature/44819–1.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)