Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இங்கிலாந்து செல்வந்தர் ரூத்ஷெல்ட் ரகசிய அறையில் சிக்கி உண்ண உணவின்றி அருந்த நீரின்றி இறந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் இங்கிலாந்து செல்வந்தர் ரூத்ஷெல்ட் குறித்தும் அவர் இறப்பு குறித்தும் உருக்கமான கதை ஒன்று பல ஆண்டுகளாக பரவி வருகின்றது.
பரவி வரும் கதை:
இந்தப் படத்தில் இருப்பவர்தான் ரூட்ஷெல்ட்.
பிரிட்டனில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.
பிரிட்டன் அரசாங்கம் இவரிடமிருந்து கடனாகப் பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
ஒரு நாள் தனது பொக்கிஷங்கள் நிறைந்த அறைக்குள் நுழைந்து, கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென வீசிய காற்றில் திறந்து வைத்த கதவுகள் திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.
அது ரகசிய அறை.
ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,
அதற்குள் செல்ல வேண்டும்.நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார். பொக்கிஷ அறையின் சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது.
பல நாட்கள் பசி ,
பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் ,
சுவற்றில் சில வரிகளை எழுதினார் ….
“நான் உலகில் மிகவும் உயர்ந்த மனிதனாக,
பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்”
அவர் மரணித்துப் பல வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.
பணத்தைக் கொண்டு, எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு,
இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும்.
இக்கதையை உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறையா?
இங்கிலாந்து செல்வந்தர் ரூத்ஷெல்ட் குறித்து பரவி வரும் கதையின் உண்மைத்தன்மை குறித்து அறிய முன்னதாக வைரலாகும் பதிவில் இடம்பெற்றிருக்கும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இதில் ‘Side profile of a mature man counting gold bars Poster Print’ என்ற தலைப்பில் இப்புகைப்படம் பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு இருப்பதை நம்மால் காண முடிந்தது. ஆனால் இதில் அப்புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் ரூத்ஷெல்ட் என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.
இதன் பின்பு ரூத்ஷெல்ட் குறித்து தேடினோம். இதில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் வாழ்ந்த நாதன் மேயர் ரூத்ஷெல்ட் (Nathan Mayer Rothchild) குறித்த தகவல்கள் தி ரூத்ஷெல்ட் ஆர்ச்சீவ் (The Rothchild Archive) எனும் தளத்தில் நமக்கு கிடைத்தது. கூடவே அவரின் படமும் இதில் இடம்பெற்றிருந்தது. இப்படம் வைரலாகும் படத்துடன் வேறுபட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
ரூத்ஷெல்ட் இங்கிலாந்தின் மிகப்பெரிய வணிகர் என்றும், இவர் 1818-1835 காலக்கட்டத்தில் இங்கிலாந்து உட்பட 26 நாடுகளுக்கு கடனளித்து உதவியுள்ளார் என்று அத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சமூக வலைத்தளப் பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதுபோல் ரகசிய அறையில் சிக்கி இவர் உயிரிழந்ததாக எந்த ஒரு தகவலும் அதில் காணப்படவில்லை. உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்ததாகவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படத்தில் இருப்பவர் ரூத்ஷெல்ட் இல்லை. அதேபோல் ரூத்ஷெல்ட் ரகசிய அறையில் சிக்கி உயிரிழக்கவும் இல்லை.
Also Read: பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்றாரா அண்ணாமலை?
இங்கிலாந்து செல்வந்தர் ரூத்ஷெல்ட் ரகசிய அறையில் சிக்கி உண்ண உணவின்றி அருந்த நீரின்றி இறந்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Amazon: https://www.amazon.ca/Profile-Mature-Counting-Poster-Print/dp/B016GHTYF2
The Rothchild Archive:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)