Fact Check
அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சிவலிங்கமா இது?

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்றை சிடிஆர் நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியின் தலைவராக விளங்குபவர் சிடிஆர் நிர்மல்குமார். இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் சிவலிங்கம் படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில்,
“மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவாலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை இதுவரை 605 பேர் விரும்பியுள்ளனர், 169 பேர் மறுகீச்சு செய்துள்ளனர், 119 பேர் மேற்கோள் காட்டி மறுகீச்சு செய்துள்ளனர்.
சிடிஆர் நிர்மல்குமார் பதிவிட்ட இந்த டிவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சிடிஆர் நிர்மல்குமார் பதிவிட்ட பதிவில், பல்லாயிரக் கணக்கான ஆண்டு பழமையான சிவலிங்கம் அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கப்பெற்றது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் பகிர்ந்துள்ள படத்தில் காணப்படும் சிவலிங்கள் மிவுகம் குறைவான ஆழத்திலேயே காணப்படுகின்றது.
மேலும் அந்த லிங்கத்தை சுற்றி ஊர்மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பொதுவாக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களில் பொது மக்கள் இவ்வாறு சாதாரணமாக நுழைய முடியாது. லிங்கத்தை சுற்றி மண்வெட்டி போன்ற உபகரணங்கள் இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

இந்த விஷயங்களெல்லாம் நமக்கு முரணாக பட்டது. ஆகவே அவர் பதிவிட்ட புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதில் அந்த சிவலிங்கம் கோயில் கட்ட பள்ளம் தோண்டியபோது கண்டறியப்பட்டது எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.
இதுக்குறித்து ஜீ 24 டாஸ் எனும் மராத்தி செய்தி சேனலில் செய்தி வந்துள்ளது.
இதன்படி பார்க்கையில் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் சிவலிங்கம் கண்டறியப்பட்டது எனும் தகவல் உண்மையானதுதான், ஆனால் அது அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்பட்டதல்ல, கோயில் கட்ட பள்ளம் தோண்டியபோது கண்டறியப்பட்டது என்பது நமக்கு தெளிவாகின்றது.
Also Read: ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?
Conclusion
சந்திரபூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி சிடிஆர் நிர்மல்குமார் பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த சிவலிங்கம், உண்மையில் கோயில் கட்ட பள்ளம் தோண்டியபோது கிடைத்தது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Result: Partly False
Our Sources
Zee 24 Taas: https://www.youtube.com/watch?v=U3LKINHKDCk
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)