வானதி சீனிவாசன் அலுவலகத்தில் ரூபாய் நோட்டுகளை எண்ண உபயோகிக்கப்படும் மெஷின் வைத்திருப்பதாக புகைப்படம் ஒன்றினைத் தொடர்ந்து தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும் ஆவார். இந்நிலையில், அவர் ஒரு அலுவலக அறையில் அமர்ந்து ஆன்லைன் மீட்டிங்கில் ஈடுப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
அதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவரது பின்னணியில் நோட்டு எண்ணும் மெஷின் ஒன்று அமைந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மக்களுக்கு சேவையாற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பணம் என்னும் மெஷின் ஏன் என்கிற தொனியில் இந்த செய்திகள் வைரலாகி வருகின்றன.
“கடை வியாபாரம் பரவாயில்லையா யக்கா”, “வர்ற லஞ்சத்துல ஒரு தாள் கூட குறைஞ்சுட கூடாது பாருங்க, அதான் ரூபாய் கவுண்டிங் மெஷின் வாங்கிட்டேன். #தனலாபம்” என்றெல்லாம் அதைத் தொடர்ந்து விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஏற்கனவே அவர் தனது எம்.எல்.ஏ அலுவலகத்தில் தனலாபம் என்று எழுதியது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று குறித்து பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுகுறித்த விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இன்று காலை ரேஸ் கோர்ஸில் மக்களை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தினால்
நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டேன். இது எனது அலுவலகம் அல்ல . கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது.
அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
எனவே, பரவும் புகைப்படம் உண்மையானது என்றாலும், அதுகுறித்து பரவும் சமூக வலைத்தள விமர்சனங்களும், வானதி சீனிவாசனின் அலுவலகம் இது என்பதாகப் பரவும் தகவல்களும் தவறானது என்று அறிய முடிகிறது. முன்னணி தமிழ் செய்தியகங்களும் இச்செய்திக்கான விளக்கத்தைப் பெற்று வெளியிட்டுள்ளன.
Conclusion:
வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று குறித்து பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)