மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த சிலரால் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களிலும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. கிட்டதட்ட 12க்கும் அதிகமானோர் அங்கு பலியாகியுள்ள நிலையில் பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், பாஜக மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகியான சினேகா என்கிற இளம்பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகியான சினேகா என்கிற இளம்பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் பரவும் தகவல் குறித்த உண்மைத்தன்மை அறிய இது குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியதில் உபயோகமான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே, முக்கிய வார்த்தைகளை உபயோகித்து நமது தேடலைத் தொடர்ந்தோம். ஓபி இந்தியா என்கிற செய்தித்தளம் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளது நமக்குத் தெரிய வந்தது.

அதில், மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பிங்கலா காவல் நிலையத்தின் கீழ் வருகின்ற ஜம்னா என்னும் கிராமத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவியான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மே 3 ஆம் தேதியன்று காணமல் போன அவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க ஊடகங்கள் சிலவும் இதனைப் பகிர்ந்துள்ளன.

மேலும், இந்த வன்கொடுமை தொடர்பாக இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்களும் கட்டிட மேஸ்திரிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகியான சினேகா என்கிற இளம்பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் பரவும் தகவல் முழுமையாக உண்மையில்லை; சினேகா என்கிற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மட்டுமே இதில் உண்மை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading/Partly False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)