யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தததை முன்னிட்டு பாஜக கட்சியினர் அவரை வரவேற்கும் போஸ்டரில் தக்ஷிண பிரதேசம் என்று தமிழகத்தைக் குறிப்பிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், ஆளும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வந்தார் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
கோவையில் பரப்புரை செய்த யோகி ஆதித்யநாத், திமுக-காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரானது. அயோத்தி ராமர் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து 120 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது; பிரதமர் மோடியின் பார்வை தமிழகத்தின் மீதுதான் இருக்கிறது என்றெல்லாம் உரையாற்றினார்.
அனுமதியின்று இருசக்கர வாகனப் பேரணி, கல்வீச்சு என்று சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இந்நிலையில், யோகி ஆதித்யநாத் வருகையை முன்னிட்டு பாஜக ‘தக்ஷிண பிரதேசத்திற்கு’ வருகை தரும் யோகியை வரவேற்பதாக போஸ்டர் அடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.


ஏற்கனவே, பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் பெயர் தக்ஷிணப் பிரதேஷ் என்று மாற்றப்படும் என்பதாகப் பரவிய போலிப்புகைப்படத்தை நாம் ஆராய்ந்து செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இந்த போஸ்டர் புகைப்படத்தை நமது வாசகர்கள் இருவர் வாட்ஸ்அப் மூலமாக நமக்கு அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய கேட்டிருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
யோகி ஆதித்யநாத் வரவேற்பு பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் பாஜக அப்படியொரு போஸ்டரை வெளியிட்டிருக்கவில்லை.
உண்மையில், பாஜகவின் தமிழகம் சார்ந்த அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது அதில் அவர்கள், “தமிழகம் வருகை தரும்” என்றே குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் தக்ஷிண பிரதேசம் என்கிற வார்த்தை மட்டும் புகைப்படத்திற்கு பொருந்தாத எழுத்துருக்களில் அமைந்திருப்பதில் இருந்தே அது எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகிறது.

உண்மையான புகைப்படம்

போலியாக உருவாக்கப்பட்டது
பாஜகவின் குறிப்பிட்ட உண்மையான போஸ்டரில் தமிழகம் என்கிற வார்த்தையை மட்டும் எடிட் செய்து தக்ஷிண பிரதேசம் என்கிற வார்த்தையை இணைத்து அந்த போலி போஸ்டரை பரப்பியுள்ளனர்.
Conclusion:
யோகி ஆதித்யநாத் தமிழகத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு, ‘தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் யோகி ஆதித்யநாத்’ என்று பாஜக போஸ்டர் உருவாக்கியதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
BJP Tamil Nadu: https://twitter.com/BJP4TamilNadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)