Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நூறு வருடங்களுக்கு முந்தைய காலண்டர் இந்த மாத காலண்டர் ஒன்றாக இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
நம்முடைய வாழ்வென்பது நேரம், காலம், தேதி, மாதம், வருடம் எனப் பின்னிப் பிணைந்தது. காலக்கணக்கை எடுத்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டவைதான் நாட்காட்டிகள் எனும் காலண்டர்கள்.
காலண்டர் என்னும் வார்த்தை உண்மையில் கலண்டே என்னும் லத்தீன் மொழியில் இருந்து உருவாக்கப்பட்ட ஆங்கிலப்பதம் ஆகும். இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஈரானியர்கள், எகிப்து நாட்காட்டிகள், மாயன் நாட்காட்டி என மத ரீதியாக, கண்டங்கள் ரீதியாக என நாட்காட்டிகளில் பல வகைகள் உள்ளன.
இந்தியாவைப் பொருத்த வரையில் பொதுவாக கிரிகோரியன் காலண்டரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜூலியன் காலண்டரில் லீப் வருடம்/லீப் இல்லாத வருடம் என்று இரண்டு வகை உள்ளது.
இந்நிலையில், “1920 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத காலண்டரும்
2021 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத காலண்டரும்
நூறு ஆண்டுக்கு பிறகு ஒரே தேதி ஒரே கிழமை” என்கிற வாசகங்களுடன் காலண்டர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சுதந்திர தின முதலமைச்சர் உரையில் ஜனவரி 15 என்று குறிப்பிட்டாரா மு.க.ஸ்டாலின்?
நூறு ஆண்டுக்கு பிறகு ஒரே தேதி ஒரே கிழமை என்று பரவும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில் குறிப்பிட்ட அந்த காலண்டர் பக்கத்தை ஆராய்ந்தபோது, அது நம் நாட்டில் அச்சடிக்கப்பட்டதில்லை என்பது தெரியவந்தது.
எனவே, அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது pixels மற்றும் Fineartamerica ஆகிய பக்கங்களில் காணக்கிடைத்தது. அப்போது, குறிப்பிட்ட அந்த புகைப்படன் கடந்த 2017, மே 28 அன்று ஜிம் லவ் என்பவரால் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அப்புகைப்படத்தில் “Old Calendar Seen In White’s Mill Near Abingdon, Va” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேஸ்புக்கில் Philippine Old Photos Collection என்கிற பக்கத்திலும் இப்புகைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் பதிவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அதில் குறிப்பிட்டுள்ள 1920, ஆகஸ்டு மாத காலண்டர் தற்போதைய 2021, ஆகஸ்டு மாத தேதி மற்றும் கிழமையை ஒத்துள்ளது. ஆனால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆகஸ்டு மாதத்தில்தான் இப்படி தேதி-கிழமை ஒற்றுமை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தால், அது உண்மையில்லை.
கடந்த 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இதே போன்று ஆகஸ்டு மாத கிழமை மற்றும் தேதி 1926, 1948, 1971, 1976, 1993, 2004 ஆகிய வருடங்களிலும் இதேபோன்று ஒன்றாக அமைந்துள்ளது.
1971 மற்றும் 2021 ஒரே காலண்டர் என்று சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. மேலும், குறைந்தபட்சம் 6 வருட இடைவெளியில் இருந்து அதிகபட்சம் 40 வருடம் வரை எந்தவகை எண்கள் இடைவெளியிலும் காலண்டர்கள் ஒன்றுபோல் அமையலாம் என்கிற விளக்கமும் பரவலாக கணிதக்கோட்பாட்டாளர்கள் மூலமாக வரையறுக்கப்படுகிறது. எனினும், இதற்கான விளக்கங்கள் பரவலாக வித்தியாசப்படுகிறது.
லீப் அல்லாத காலண்டர் வருடங்கள் எனில் 28 வருடங்களுக்கு ஒருமுறை இந்த ஒரே கிழமை-ஒரே தேதி காலண்டர்கள் திரும்ப வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
கணிதக் கோட்பாடுகளின்படி ஒரே கிழமை-ஒரே தேதி வரும் வருடங்களை கணக்கிடும் கணித சூத்திரங்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றிற்கான இணைப்புகளையும் இங்கே கொடுத்துள்ளோம்.
நூறு வருடங்களுக்குப் பிறகு ஆகஸ்டு மாதக் காலண்டர் தேதி-கிழமை ஒன்றாக இருப்பது மிகப்பெரிய அதிசயம் என்று பரவும் புகைப்படத் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)