மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்து விட்டதாக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்” என்று டிவீட் ஒன்று பதிவிடப்பட்டது.

இதனையடுத்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் மதுரை எய்ம்ஸ் வரவுள்ள இடத்திற்கு சென்று, அந்த இடம் கட்டிடம் ஏதும் இல்லாமல் வெற்று இடமாக இருப்பதை படம் பிடித்து வெளியிட்டனர்.
இதனையடுத்து தமிழக பாஜக பழைய டிவீட்டை நீக்கி விட்டு, “எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவாக துவங்கும் அதற்கு தேவையான பூர்வாங்கப் பணி 95 % முடிவடைந்து விட்டது ” என்று நட்டா கூறியதாக டிவீட் செய்தது.
நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்த பேசிய இவ்விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியதால், நட்டாவின் இரண்டு நாள் தமிழக பயணத்தில் பேசிய தகவல்கள் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஃபேக்ட்செக் செய்ய முடிவெடுத்தோம்.
Fact check/Verification
தகவல் 1 : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு ₹1,225 கோடி நிதி ஒதுக்கீடு
நட்டா காரைக்குடி நிகழ்வில் ஆற்றிய உரை பாஜக யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த உரையில், “மோடி அவர்களின் தலைமையில் நாங்கள் தமிழகத்தில் உள்ள மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்துள்ளோம். எனக்கு நினைவிருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது, எங்களுக்கு எய்ம்ஸ் வேண்டும் என்று எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பார். இப்போது இதை நான் மகிழ்ச்சியாக பகிர்கிறேன். ₹1,225கோடி நிதி ஒதுக்கீட்டில் 750 படுக்கையுடன் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகவுள்ளது. இதில் 250 படுக்கைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள். மேலும் இதுத்தவிர்த்து ₹164 கோடி கூடுதல் நிதியும் மதுரை எய்ம்ஸ்க்கு தரப்படவுள்ளது” என்று நட்டா பேசியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய மத்திய சுகாதாரத்துறை இணையத்தளத்தை ஆய்வு செய்தோம். இந்த பணிக்காக முதன்முதலில் ₹1,264 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தோம்.

இதனையடுத்து தேடியதில் இந்த திட்டத்திற்கான நிதி ₹2,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை காண முடிந்தது.
நியூஸ்கிளிக் வெளியிட்ட செய்தியில், இத்திட்டத்திற்காக ஒதுக்கிடப்பட்ட நிதி ₹1,977.8 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜைக்கா (Japan International Cooperation Agency) நிறுவனம் ₹1,627.7 கோடி கடனாக வழங்கும். மீதமுள்ள தொகையை தவணை முறையில் பட்ஜெட் உதவிக்காக தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா 2022 ஜனவரி மாதம் வெளியிட்ட செய்தியில் இத்திட்டத்திற்கான நிதி ₹1,264 கோடியிலிருந்து ₹2,000 கோடியாக 2020 டிசம்பரில் உயர்த்தப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தேடியதில், திமுக எம்.பி. தயாநிதிமாறன் 2021 குளிர்கால கூட்டத் தொடரில் கேட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை பதிலளித்த அறிக்கை ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் எய்ம்ஸ் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த தகவல் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அதில் இத்திட்டத்திற்கு முதலில் ₹1,264 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 2020-யில் இந்நிதி ₹1,977.8 கோடியாக மாற்றப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்திற்காக டிசம்பர் 10, 2021 வரை ₹12.32 கோடி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ₹11.99 கோடி பூர்வாங்க பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
நாம் மேலும் தேடியதில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் டாக்டர் பாரதி பவார் வெளியிட்ட அறிக்கை ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் இத்திட்டம் 2026 அக்டோபரில் நிறைவடையும் என்றும், இதுவரை இத்திட்டத்திற்கு ₹12.35 கோடி நிதி ஒதுக்கிடபட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Conclusion
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு ₹1,225கோடி நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளது என்று நட்டா கூறிய தகவல் தவறானது என்று அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் உறுதியாகின்றது. இத்திட்டத்திற்கு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ₹12.32 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
Result: False
தகவல் 2: 95 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறைவு
பொன்.ராதாகிருஷ்ணன் எங்களுக்கு எய்ம்ஸ் வேண்டுமென்று கூறிக் கொண்டே இருப்பார். ₹1,264 கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் எங்கே கட்டுவது என்று பிரச்சனை தோன்றியது… நாங்கள் அதை மதுரையில் கட்ட விரும்பினோம்… உங்களின் உதவியால் நாங்கள் இதில் வெற்றியடைந்தோம்… இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95 சதவீதம் பணி நிறைவடைந்துவிட்டது. கூடிய விரைவில் இம்மருத்துவமனை மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். என்று நட்டா பேசியுள்ளதை பாஜக யூடியூப் சேனலில் காண முடிந்தது.
நியூஸ்செக்கர் இதுகுறித்து ஆய்வு செய்கையில், தி பிரிண்ட் ஆகஸ்ட், 2022-ல் வெளியிட்ட செய்தி ஒன்றை காண முடிந்தது. கொரானா காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி பணிகள் முடிக்கப்படவில்லை என்றும், இத்திட்டம் 2026 அக்டோபருக்குள் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட படத்தை வைத்து பார்க்கையில் இதுவரை அங்கு எவ்விதமான கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை என்பதை அறிய முடிகின்றது. மதுரையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சுந்தர் இரண்டு எம்பிக்களும் எடுத்த படமும் உண்மையானதுதான் என்று உறுதி செய்துள்ளார். கூகுள் மேப்பும் அப்பகுதில் எந்த வித கட்டுமான பணியும் நடக்காமல், அப்பகுதி வெற்று நிலமாகவே உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.

மேலும் அமைச்சர் பாரதி பவார் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் காண்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றது. அப்பணியும் 92 சதவீதமே முடிவடைந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.

Conclusion
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளதாக நட்டா கூறியது தவறான தகவல். இதுவரை எவ்வித கட்டுமானப் பணியும் நடக்கவில்லை. பூர்வாங்க பணிகள் மட்மே இதுவரை நிறைவடைந்துள்ளது, அதுவும் 95 சதவீதம் அல்ல, 92 சதவீதம்.
Result: False
(இந்த கட்டுரையானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)