Fact Check
அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை செய்வதாக பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim: அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை
Fact: வைரலாகும் வீடியோவில் காட்டப்படும் நடைமுறை வெளிநாடுகளில் நோயால் பாதிக்கப்பட்ட இறைச்சி கோழிகளை கொல்ல பயன்படுத்தப்படும் முறையாகும்.
அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா.?” என்கிற தலைப்பில் அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெண்மையாக்கி விற்பனை செய்வதாக வீடியோ பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?
Fact Check/Verification
அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 17, 2024 அன்று galapagos_marc என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில், ”10000க்கும் மேற்பட்ட வான்கோழிகள் சோப்பு நுரையால் கொல்லப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக இவை கொல்லப்பட்டுள்ளன. ஆனால், தேவையற்ற இந்த நடைமுறை நிறுத்தப்படவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வீடியோவைப் பகிர்ந்துள்ள Thesavemovement என்னும் விலங்குகளின் உரிமைகளுக்கான தன்னார்வ அமைப்பு, ”Foam depopulation என்னும் இந்த முறையால் AvianFlu உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் வான்கோழி போன்ற உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. உணவுக்காக பறவை, விலங்குகளை உபயோகிப்பதை எப்போது நிறுத்தப்போகிறோம்?” என்பதாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இறைச்சி பண்ணைகளில் பயன்படுத்தப்படும் Foam Depopulation என்னும் இந்த முறை மூலமாக நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சோப்பு நுரையை முழுவதுமாக பரப்பி அவை மூச்சுத்திணறல் மூலமாக இறப்பது போல் செய்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவில் 64000க்கும் மேற்பட்ட வான்கோழிகள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இம்முறையில் அழிக்கப்பட்டுள்ளன என்று Animal Save Movement பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Foam Depopulation முறை குறித்த மேலும் செய்திகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட இறைச்சிக்கான பறவைகளை கொல்லும் இம்முறைக்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்புகளும் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கேரள அரசு கால்நடை மருத்துவரான Dr.ஷைன் குமாரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உணவுக்கு பயன்படுத்தப்படும் பறவைகளை கொல்வதற்காக வெளிநாடுகளில் இறைச்சி பண்ணைகளில் பின்பற்றப்படும் முறை இது. இதற்கு Foam Depopulation என்று பெயர்” என விளக்கமளித்தார். மேலும், இதுகுறித்து இறைச்சி பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, “இந்தியாவில் பெரும்பாலும் க்ளோரோபார்ம் முறையே நோய் பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்ல பயன்படுத்தப்படுகிறது. பின்னர், உயிரிழந்த கோழிகள் புதைக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
Conclusion
அழுக்கான கோழிகளை சோப்பு நுரையால் வெள்ளையாக்கி விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Instagram post from galapagos_marc, Dated October 17, 2024
Facebook Post from Animal Save Movement, Dated October 20, 2024
Phone Conversation with Dr shine Kumar, Chief district veterinary officer department of veterinary medicine, Kerala government
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)