Claim: இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை – மு.க.ஸ்டாலின்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
“இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிபட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குபெறும் அளவுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்து விடவில்லை” என்று தமிழ்நாட்டு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் சில இடங்களில் காணப்படும் வார்த்தைகளுக்குள் இடைவெளி இன்றி இருப்பதையும், அதில் பயன்படுத்தப்பட்டிருந்த எழுத்துரு (Font) நியூஸ் 7 தமிழில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துருவிலிருந்து மாறுபட்டிருப்பதையும் காண முடிந்தது. மேலும் அந்த நியூஸ்கார்டில் நீல நிறத்தை கொண்டு ஏதோ சில வார்த்தைகளை அழிக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாக இருக்குமோ என்கிற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள காலமான 2019 பிப்ரவரி 13, மதியம் 2 மணிக்கு நியூஸ் 7 தமிழில் இந்த நியூஸ்கார்டு வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம்.
இத்தேடலில் அந்த குறிப்பிட்ட நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக நியூஸ்கார்டு ஒன்றை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து மதியம் 2 மணிக்கு வேறு எந்த நியூஸ்கார்டையும் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
தொடர்ந்து தேடியதில் நியூஸ் 7 தமிழின் எக்ஸ் தளப் பக்கத்திலும் வைரலாகும் இந்த நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!
Conclusion
இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X post from News 7 Tamil, Dated February 15, 2019
X post from News 7 Tamil, Dated September 08, 2023
Phone Conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)