டெல்லி அக்பர் சாலைக்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் பெயரினை பிரதமர் மோடி சூட்டியுள்ளார் என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த புதனன்று ( 08/12/2021) விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, அவர்களுடைய உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
இந்நிலையில், “டில்லி சாலைக்கு தளபதி பிபின் ராவத் பெயர். டில்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவத் தளபதி பிபின் ராவத் பெயர் சூட்டினார் பிரதமர் மோடி” என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக வதந்தி
Fact check/ Verification
டெல்லி அக்பர் சாலைக்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் பெயரினை பிரதமர் மோடி, ஒன்றிய அரசு சார்பாக சூட்டியுள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட செய்தி உண்மையா என்று தேடியபோது, டெல்லி முனிசிபல் கவுன்சில் உறுப்பினரான கிரீஷ் சச்தேவ், டெல்லி பாஜக ஊடகப்பிரிவு தலைவர் நவீன் குமார் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கார்க் உள்ளிட்டோர் டெல்லி அக்பர் சாலைக்கு, முப்படைத் தளபது பிபின் ராவத் பெயரினை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இதுவரை அப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தரப்பிலோ, ஒன்றிய அரசு தரப்பிலோ எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே, மகாராணா பிரதாப் என்றும், சாம்ராட் ஹேமு விக்ரமாதித்யா மார்க் என்றும் அக்பர் சாலையின் பெயர் மாற்றப்படவேண்டும் என்கிற கோரிக்கைகள் அடிக்கடி எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
டெல்லி அக்பர் சாலைக்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் பெயரினை பிரதமர் மோடி, ஒன்றிய அரசு சார்பாக சூட்டியுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது; பெயர் மாற்றம் செய்யப்படவில்லை, கோரிக்கை மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)