Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“பொது இடத்தில் பாதை அமைப்பதை தட்டிகேட்ட திமுக எம்எல்ஏ தந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல்: 3 பைக்குகளுக்கு தீ வைப்பு: போலீசார் குவிப்பு” என்று ஒரு செய்தி தினகரனில் வந்திருந்தது.

ஜூலை 12ஆம் தேதி தினகரன்.காம் இணையத்தளத்தில் “பொது இடத்தில் பாதை அமைப்பதை தட்டிகேட்ட திமுக எம்எல்ஏ தந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல்: 3 பைக்குகளுக்கு தீவைப்பு: போலீசார் குவிப்பு” என்றத் தலைப்பில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதில், சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் அந்நிலத்திற்கு வழி இல்லாததால் கிராமத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் கால்வாயை ஆக்கிரமிக்க முயற்சித்ததாகவும் அதைத் தடுக்க அவ்வூரைச் சேர்ந்த குருநாதன் என்பவர் முயற்சித்தபோது அவரை ரவுடிக் கும்பலைக் கொண்டுத் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது குருநாதனைக் காப்பாற்ற திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை இலட்சுமிபதி அங்கு வந்துள்ளார். அப்போது அவரையும் ரவுடிகள் தாக்கியுள்ளனர். அப்போது இலட்சுமிபதி அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியினால் வானத்தைப் பார்த்து சுட்டதாலும் கிராம மக்கள் துரத்தியதாலும் அக்கும்பல் தப்பியோடியது. இச்சம்பவத்தால் எம்எல்ஏவின் தந்தை உட்பட மூவருக்கு அடிப்பட்டதாகவும் 3 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டதாகவும் மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்செய்தியின் உண்மை நிலவரம் குறித்து நியூஸ் செக்கர் சார்பில் நாம் ஆராய்ந்தோம்.
நாம் இச்செய்தியின் உண்மை நிலவரம் குறித்துத் தேடியபோது மற்ற முன்னணி ஊடகங்களான இந்து தமிழ், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உட்பட மேலும் சில ஊடகங்களில் இச்சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகி இருந்ததை நம்மால் காண முடிந்தது. இதுக்குறித்து நம் தரப்பில் இதுக்குறித்து விசாரித்தபோது நமக்கு மேலும் பலப் புதிய தகவல் கிடைத்தது.
உண்மையில், திருப்போரூர் எம்எல்ஏ கோஷ்டிக்கும் ரியல் எஸ்டேட் கோஷ்டிக்கும் இடையே ஏற்கனவே கோஷ்டித் தகராறு இருந்துள்ளது. ரியல் எஸ்டேட் கோஷ்டி சாலை அமைக்க முயற்சி செய்தபோது இரு கோஷ்டிக்கும் இடையேத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏவின் தந்தை மற்றும் அவரது உறவினர் குருநாதனை ரியல் கோஷ்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். உடனே எம்எல்ஏ இதயவர்மனும் எம்எல்ஏவின் தந்தையும் தங்கள் வசம் வைத்திருந்த கைத் துப்பாக்கியினால் எதிர் கோஷ்டியை நோக்கி சுட்டுள்ளனர். இதில், 2 குண்டுகள் காரில் பட்டுள்ளது. ஒரு குண்டு அந்த வழியாகச் சென்ற சீனிவாசன் என்ற கீரை வியாபாரியின் கையில் பட்டுள்ளது. இதில் அவர் காயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கிகளால் சுடுவதைப் பார்த்ததும் ரியல் எஸ்டேட் கோஷ்டியினர் அவர்கள் வந்திருந்த இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், பொக்லைன் போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து சிதறி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள், அந்த இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இந்த மோதல் குறித்து இருத் தரப்பினரும் தனித்தனியாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ரியல் எஸ்டேட் கோஷ்டியினர் மற்றும் துப்பாக்கிக் குண்டால் காயமடைந்த சீனிவாசன் ஆகியோர் அளித்த புகாரின்பேரில் எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரு துப்பாக்கிகளும் உரிமம் பெற்றே வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த உரிமங்கள் காலாவதியாகிவிட்டன. அதைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.
எம்எல்ஏ இதயவர்மன், அவரது ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி, 5 நபர்களுக்கு மேற்பட்டோர் ஒன்றாக கூடி கலவரம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், கையால் அடித்துக் காயத்தை ஏற்படுத்துதல், ஆயுதத்தை தவறாகப் பயன்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி அளித்த புகாரின்பேரில் எதிர் தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
எங்களின் விரிவான விசாரணைக்குப் பின் தினகரன் இணையத் தளம் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை வெளியிட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. தினகரனில் சம்பவ இடத்தில் எம்எல்ஏ இருந்ததை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதேபோல் கீரை வியாபாரி குண்டடிப்பட்டதையும் இரு சக்கர வாகனங்கள் எம்எல்ஏ கோஷ்டியினரால் எரிக்கப்பட்டதைக் குறித்தும் குறிப்பிடவில்லை. அதேபோல் எம்எல்ஏவின் உறவினரை ஊரார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆகவே தினகரன் இணையத் தளம் ஒரு கோஷ்டி மோதலை ஒரு பொதுப்பிரச்சனைபோல் திரித்து எழுதியுள்ளது என்று நமக்குத் தெளிவாகிறது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 25, 2025
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
October 10, 2025