வந்தச் செய்தி:
வாரணாசியில் நேபாள மனிதருக்கு மொட்டையடித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்பட்டது.
சரிப்பார்ப்பு:
நேபாள பிரதமர் சர்மா ஒலி, இராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று விடுத்த அறிக்கையானது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில், வாரணாசியைச் சேர்ந்த கும்பல் ஒன்று நேபாள மனிதர் ஒருவருக்கு மொட்டையடித்து, அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடவும் நேபாளப் பிரதமருக்கு எதிராக கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இதுக்குறித்து கலைஞர் செய்திகளிலும் செய்தி வெளியாகியிருந்தது.
இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் நாம் ஆராய்ந்தோம்.
உண்மைத் தன்மை:
மேலே கூறிய செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தபோது, நமக்குப் பல புதிய விவரங்கள் கிடைத்தது.
வீடியோவில் காட்டப்பட்ட நபர் உண்மையில் நேபாளத்தைச் சார்ந்தவரே கிடையாது. அவர் வாரணாசியில் பிறந்தவர். அவருக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவைகளும் உள்ளன. இவரின் பெற்றோர் நீர்நிலைத் துறையில் பணியாற்றியவர்கள். இப்போது இவரின் சகோதரர் அத்துறையில் பணிப்புரிகிறார்
சம்பவம் நடந்த அன்று, விஷ்வ இந்து சேனா சங்கதன் அமைப்புக்குத் தொடர்புடைய அருண் பதாக் என்பவரும் அவரின் கூட்டாளிகளும் இந்த நபரை ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, அவருக்கு மொட்டையடித்து மேற்கூறியவாறு கோஷமிடக் கூறி இருக்கிறார்கள். அந்நபரும் அவ்வாறே செய்துள்ளார். அதன்பின் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
மேலும், சம்மந்தப்பட்ட நபர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும் இதற்கு காரணமானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் காவல் துறையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக சமயம் இணையத் தளத்திலும் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.
முடிவு:
நம் விரிவான ஆய்வுக்குப் பின் வைரலான வீடியோவில் இருக்கும் நபர் உண்மையில் நேபாளத்தைச் சார்ந்தவரே அல்ல என்பதும், இது முற்றிலும் பொய்யாக, ஒரு குறிப்பிட்டக் கும்பலால் வேண்டுமென்றே உருவாக்கிப் பரப்பப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.
Sources:
- Google search
Result: False
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது எங்கள் இணையத்தளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

