நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வைத்திருக்கும் கருவி மூலம் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், அதைக் கண்ட மக்கள் அவரைப் பிடித்து அடித்து, உதைத்ததாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact check/Verification:
பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவின் போது, பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் ஒரு கருவியை வைத்துக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றதாகவும், அவரை பிடித்து மக்கள் அடித்து உதைத்ததாகவும், அந்த கருவி மூலமாக 2 நிமிடத்தில் கிட்டதட்ட 8000 வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என்ற செய்தியுடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
https://m.facebook.com/story.php?story_fbid=386003976091734&id=100040464052328
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய, `பீகார் தேர்தல், மின்னணு வாக்கு இயந்திரம் ஹேக்’ உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டு கூகுள் தேடுபொறியில் தேடினோம். கூடவே, வேறெந்த முன்னணி செய்தி நிறுவனங்களும் பீகார் தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டது என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கவில்லை.
மேலும், அந்த வீடியோவை உன்னிப்பாக கேட்டபோது ரூகி என்கிற ஊர் குறித்த வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. நமது தேடலின் முடிவில், இந்த வீடியோ குறித்த கட்டுரை ஒன்றினை ஆங்கில செய்தி வலைத்தளப்பக்கமான ‘தி லாஜிக்கல் இந்தியன்’ வெளியிட்டிருந்தது.

அதில், ரூகி என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகின்ற கிராமம், உண்மையில் ஹரியானாவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரோடா சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது அந்த ரூகி கிராமம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. பரோடாவிற்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. எம்.எல்.ஏ கிருஷ்ணன் ஹீடா தத்தின் மறைவிற்கு பிறகு, அந்த காலியிடத்தை நிரப்ப இத்தேர்தல் நடைபெற்றுள்ளது.
உண்மையில், வாக்குப்பதிவு மையங்களுக்கு வெளியே வாக்காளர்களுக்கு இ-வோட்டிங் ஸ்லிப்புகள் வழங்கி வந்த இளைஞர்களை, வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்கிறார்கள் என்று நினைத்து மக்கள் தாக்க முயற்சித்ததும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஹரி பூமி என்கிற இணையச் செய்தி பக்கம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த ஒரு கிராமம் மட்டுமின்றி பல்வேறு வாக்குப்பதிவு மையங்களிலும் இ-வோட்டர் ஸ்லிப் வழங்க முயற்சித்த இளைஞர்கள் பலரையும் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்வதாக கூறி மக்கள் இவ்வாறு தாக்க முயற்சித்துள்ளனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தி குவிண்ட், தமிழில் யூ-டர்ன் ஆகிய இணையப்பக்கங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே, மேற்கண்ட வீடியோ பீகார் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்றபோது எடுக்கப்பட்டதாக பரவுகின்ற தகவல் முற்றிலும் தவறானது.
Conclusion:
பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முயன்ற பாஜக இளைஞர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Result: Misleading
Our sources:
The Logical Indian: https://thelogicalindian.com/fact-check/evm-hacking-24808
Youturn: https://youturn.in/factcheck/bihar-evm-machine-hacking.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)