தமிழகத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக மின்சாரக் கம்பிகள் மீது துணிகள் உலர்த்தப்படுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நிலக்கரி நெருக்கடியால் இந்திய மாநிலங்கள் முழுவதும் மின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழ்நாட்டிலும் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். எனினும், தமிழ்நாடு அரசு மின்சாரத்துறை அமைச்சகம் இதனை மறுத்து வருகிறது.
இந்நிலையில், “திருட்டு திமுக ஆட்சியில் கரண்டு கம்பி மீது துணி உலர்த்த இந்த தம்பிக்கு நம்பிக்கை கொடுத்ததே அணில் மந்திரி தான்” என்பதாக பதிவு ஒன்றினை பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் இப்பதிவு வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெட்ரோல், டீசல் வருவாயை பாஜக ராமர் கோவில் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகிறது என்றாரா வானதி?
Fact Check/Verification
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு நிலையால் மின்சார கம்பி மீது உலர்த்தப்படும் துணிகள் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட பதிவில் இடம்பெற்றிருந்த மின்சார கம்பியில் துணி உலர்த்தப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலமாக கூகுளில் தேடியபோது கடந்த 2015 ஆம் வருடம், ஜூன் 5 ஆம் தேதியன்று india.com என்கிற இணைய செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்த செய்திக் கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது.
அதில், ”அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மின்சார கம்பிகளில் துணி உலர்த்தும் உத்தர பிரதேச மக்கள்” என்கிற செய்திக்கட்டுரையில் தற்போது வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, 2017 ஏப்ரலில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த புகைப்படத் தொகுப்பு ஒன்றிலும் இந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

எனவே, தமிழ்நாடு என்று வைரலாகும் இப்புகைப்படச் செய்தி தவறானது என்பது நமக்கு உறுதியாகியது.
Conclusion
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு நிலையால் மின்சார கம்பி மீது உலர்த்தப்படும் துணிகள் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False Context/Missing context
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)