‘டெல்லி சலோ’ போராட்டத்தில் காலிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check/ Verification
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் ‘டெல்லி சலோ’ எனும் போராட்டம் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இப்போராட்டம் குறித்து நேர்மறையாகவும், எதிர் மறையாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.
அதில் ஒன்றாக, ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் காலிஸ்தான் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.


சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்
1940-ல் பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி லாகூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனி நாடு கேட்டு பெற்றுவிடுவார்கள். இந்துக்களுக்கு இந்துஸ்தானம் இருக்கும். நமக்குத்தான் தனி நாடு இல்லாமல் போய்விடும் என்று நினைத்த சீக்கியர்கள், காலிஸ்தான் என்ற தனி நாடு கோரினார்கள்.
இக்கோரிக்கையானது சுதந்திரந்திற்கு முன்பும், பின்பும் சீக்கியர்கள் சிலரால் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. ஆப்ரேஷன் புளூ ஸ்டாருக்குப் பிறகு இக்கோரிக்கையை வைப்பது இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி சலோ போராட்டத்தில் “We want Khalistan’ எனும் பதாகையை சில போராட்டக் காரர்கள் வைத்திருந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படம் பழைய புகைப்படம் என்பது நமக்கு தெரிய வந்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படமானது காலிஸ்தான் குறித்த பல கட்டுரைகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
ஆனால் இப்புகைப்படம் சரியாக எந்த வருடம் எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் இப்படம் கண்டிப்பாக டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதை நம்மால் உறுதியாக கூற முடியும். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரைகளிலும் இப்படத்தை நம்மால் காண முடிந்தது.

Conclusion
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் காலிஸ்தான் கோரிக்கை விடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் உண்மையில் ‘டெல்லி சலோ’ போரட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இப்புகைப்படம் பழைய புகைப்படம் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/HinduNewsToday/posts/205904211009088
Facebook Profile: https://www.facebook.com/groups/1802075443422233/permalink/2459213947708376
The Indian Panorama: https://www.theindianpanorama.news/india/demarche-to-uk-over-anti-india-meet/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)