கேரள ரயில் நிலையம் ஒன்றில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கிறிஸ்துவ மதச்சின்னமான சிலுவையை சிலர் பொருத்தியிருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact check/Verification:
கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடவுளின் தேசம் கேரளாவிற்கு மதம் மற்றும் அரசியல் ரீதியிலான வதந்திகளும் புதிதல்ல.
அவ்வகையில், கேரள ரயில் நிலையம் ஒன்றில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற ரயில்வே இடத்தில், பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த சின்னமான சிலுவை நடப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
கூடவே, ரயில்வே துறை அமைச்சர் கண்களில் படும்வரை இப்புகைப்படத்தை ஷேர் செய்வோம் என்னும் வாசகமும் பதிவு செய்யப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
கேரள ரயில் நிலையத்தில் சிலுவைக்குறி நடப்பட்டுள்ளதாகப் பரவும் அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய முதலில் அப்புகைப்படத்தை நன்கு ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் உள்ள மலையாள வார்த்தைகள் `எர்ணாகுளம் டவுன்’ என்பதைக் குறிப்பதையும் கண்டறிந்தோம்.
தொடர்ந்து, சர்ச்சைக்குள்ளாகும் அச்சிலுவை என்னவென்று அறிந்து கொள்ள அதனை என்லார்ஜ் செய்து பார்த்தோம்.

அதன் முடிவில், வைரல் பதிவில் சிலுவைக்குறி என்று குறிப்பிடப்படும் பொருள் உண்மையில் ரயில்வே நிலையங்களில் மக்களின் வசதிக்காக அரசால் அமைக்கப்படும் இருபக்க குடிநீர்க்குழாய் அமைப்பு என்பது நமக்குத் தெரிய வந்தது.
புகைப்படத்தை உற்று நோக்கினால் வெள்ளை நிறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குடிநீர்க் குழாயை நம்மால் காண முடியும்.
மேலும், கேரள ரயில் நிலையம், ரயில் நிலைய குடிநீர்க் குழாய்கள் என்கிற முக்கியச் சொல்லாடல்களை உபயோகித்து தேடியபோது நம்மால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கண்டறிய முடிந்தது.


தொடர்ந்து, ரயில்வே குடிநீர்க்குழாய்கள் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பினை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அது சிலுவை போன்ற அமைப்பிலேயே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா முழுவதுமே பல்வேறு ரயில் நிலையங்களிலும் இது போன்ற குடிநீர்க்குழாய் அமைப்பு இருக்கிறது என்பதும் இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது.
Conclusion:
கேரள ரயில் நிலையத்தில் அனுமதியின்றி மதச்சின்னமான சிலுவை நடப்பட்டுள்ளது என்று பரவுகின்ற புகைப்படம் தவறானது; உண்மையில் அப்புகைப்படத்தில் இருப்பது குடிநீர்க்குழாய் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Pinterest: https://www.pinterest.se/pin/621285711066728081/
Twitter: https://twitter.com/mugathirai/status/1347733130489208833?s=20
Reverie Chaser: https://reveriechaser.com/the-tip-of-the-golden-triangle-agra/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)