நேற்றைய தினம் தமிழ்நாடு தமிழ்நாடு பாஜகவின் புதிய மாநிலத்தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “தலைமை ஏற்றவுடன் பாஜக தலைவர் அதிரடி பேச்சு அதிமுகவில் ஆண்மையுள்ள ஒருவரை கூட பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. கூட்டணி இருப்பதும் இல்லாததும் இரண்டாம் விஷயம். சட்டமன்றத்தில் தைரியமுடனும் ஆண்மையுடனும் முதுகெலும்புடன் பேசக்கூடிய அதிமுகவினரை தன்னால் பார்க்க முடியவில்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியிருப்பதை காண முடிந்தது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் இல்லை என்று பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு நயினார் நாகேந்திரன் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதல்ல. 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என அறிய முடிந்தது. மாணவி லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் இக்கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.
“சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் இல்லை – நயினார் நாகேந்திரன்.!!” என்று தலைப்பிட்டு ஜனவரி 25, 2022 அன்று மாலைமுரசு டிவி யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அவ்வீடியோவின் 8:57 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கருத்தை நயினார் நாகேந்திரன் பேசி இருந்தார்.
வேறு சில ஊடகங்களும் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
தொடர்ந்து தேடுகையில் அஇஅதிமுக பற்றிய தனது கருத்துக்கள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 25, 2022 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில் “இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ பழைய வீடியோ என்பதும், அவ்வீடியோவில் உள்ள கருத்தை நயினார் பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்றப்பின் பேசவில்லை என்பதும் உறுதியாகின்றது.
Also Read: நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்றாரா சீமான்?
Conclusion
சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் இல்லை என்று பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு நயினார் நாகேந்திரன் கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். நயினார் நாகேந்திரன் 2022 ஆம் ஆண்டில் பேசிய பழைய வீடியோவை வைத்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Malaimurasu TV, dated January 25, 2022
X post by Nainar Nagendran, State President, BJP, dated January 25, 2022