Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது. ஆதார் அட்டையை காட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லலாம் என்று அறிவித்தார் நிதின் கட்கரி.
Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் சுங்கச்சாவடிக்கு அருகில் இருப்பவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Pass) வழங்கப்படும் என்றே நிதின் கட்கரி கூறினார். அந்த அனுமதிச் சீட்டுக்கும் மாதம் ரூ.330 கட்டணமாக செலுத்த வேண்டும்.
“உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது. ஆதார் அட்டையை காட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லலாம்” என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று நிதின் கட்கரி அறிவித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் இடைவெளிக்கு குறைவான தொலைவில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று நிதின் கட்கரி அறிவித்ததாக கூறி நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று மார்ச் 22, 2022 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் வீடியோவின் மற்றொரு நீண்ட வடிவம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில், “சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆதார் அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Pass) வழங்கப்படுகின்றது. அவர்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்யலாம். அதேபோல் 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே வரும். அதற்கு மேல் வந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நான் உறுதியளிக்கின்றேன் இன்னும் மூன்று மாதத்திற்குள் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடியே இருக்கும். அதற்கு மேல் இருந்தால் அது மூடப்படும்” என்று அமைச்சர் நிதின் கட்கரி பேசி இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் ANI-யிலும் இதே தகவலை பதிவாக வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றே அமைச்சர் பேசியுள்ளார் என்பதும், 60 கி.மீக்குள் கட்டணம் கிடையாது என்று அவர் பேசவில்லை என்பதும் தெளிவாகின்றது.
இதனையடுத்து அமைச்சர் கூறிய ‘அனுமதிச் சீட்டு’ குறித்து தேடினோம். இத்தேடலில் இந்த நடைமுறையானது 2008 ஆம் ஆண்டிலிருந்தே அமலில் இருப்பதை அறிய முடிந்தது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008-ன் படி யாருக்கெல்லாம் கட்டண விலக்கு அளிக்கப்படுகின்றது என்பது குறித்த அறிக்கை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து நமக்கு கிடைத்தது.
அந்த அறிக்கையில் சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிற்குள் வசிப்பவர்கள் வியாபாரத்திற்கு அல்லாமல் (Non Commercial), தங்கள் சொந்த தேவைக்காக வாகனங்களை பயன்படுத்துபவர்கள் 2007-2008 கட்டண விதிப்படி மாதத்திற்கு ரூ.150 செலுத்தி இந்த அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுவும் அவர்களுக்கு சர்வீஸ் சாலை அல்லது மாற்று வழி வழி இருப்பின் இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் இந்த அனுமதி சீட்டிற்கான ஒரு மாத கட்டணம் தற்போது (2023-2024 கட்டண விதிப்படி) ரூ.330 ஆக உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைத் துறையின் இணையத்தளம் வாயிலாக அறிய முடிந்தது.
Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று நிதின் கட்கரி அறிவித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் சுங்கச்சாவடிக்கு அருகில் இருப்பவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றே கூறினார். அந்த அனுமதிச் சீட்டுக்கும் மாதம் ரூ.330 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X Post from Nitin Gadkari, Minister of Road Transport & Highways Government of India, Dated March 22, 2022
X Post from ANI, Dated March 22, 2022
Notification from the Ministry of Road Transport & Highways
Toll Information System‘s Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)