Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுகவைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவான பூங்கோதை ஆலடி அருணா வியாழன் அன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி பரவியது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதை. இவர் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணாவின் மகள். மருத்துவரான இவர் கடந்த வியாழன் (19/11/2020) அன்று உடல்நலக்குறைவுக்கு உள்ளானதால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சிக்கு உட்பட்டதாகவும், திமுக கூட்டத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலே அவரது தற்கொலை முயற்சிக்கு காரணம் எனவும், அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டதே அவரது உடல்நலக்குறைவுக்கு காரணம் எனவும் பல முன்னணி ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பல்வேறு வகையாகச் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆகவே, சமூக வலைத்தள வாசிகளும், ஊடகங்களும் சொல்வது போன்று பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்குத்தான் முயன்றாரா? என்பது குறித்து அறிய, இத்தகவலின் பின்னணி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
இந்நிலையில், பல்வேறு ஊடகங்களும் பூங்கோதை தற்கொலை முயற்சி செய்தார் என்று கூறிக்கொண்டிருந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை நமக்குக் காணக்கிடைத்தது.
அவ்வறிகையில் அவர்,
“டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா அறிக்கை
19.11.2020 காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து – என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு – மூளை, நெஞ்சு சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
15 ஆண்டுகள் அரசியலில் – முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது எவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல கழகத் தலைவர் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு – சிகிச்சை பெற்று வருகிறேன்.
எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க.
ஆகவே எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி – என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும் – என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்.”
என்று தெரிவித்துள்ளார். அதன் இணைப்பை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம். மேலும், முன்னணி ஊடகங்களும் தற்கொலை முயற்சி குறித்த அவரது மறுப்பை செய்தியாக வெளியிட்டுள்ளன.
எனவே, பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று பரவும் தகவல் தவறானதாகும் என்பதை அவரது அறிக்கையின் அடிப்படையில் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கமளித்துள்ளோம்.
Poongothai Aladi aruna: https://www.facebook.com/permalink.php?story_fbid=1561656310844874&id=100010015605838
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025