Fact Check
வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது கழுத்தில் சிலுவை அணிந்திருந்தாரா பிரியங்கா காந்தி?
Claim: வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது கழுத்தில் சிலுவை அணிந்திருந்தார் பிரியங்கா காந்தி.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். பிரியங்கா காந்தியின் கழுத்தில் காணப்படும் சிலுவை எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டதாகும். அதேபோல் அப்படமும் கேரளாவில் எடுக்கப்பட்டதல்ல; 2017 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாகும்.
“’காசி தேர்தலா உத்ராட்சம், கேரளா தேர்தலா சிலுவை’.. எப்படி என் வேசம்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் பிரியங்கா காந்தி ருத்ராட்சை அணிந்து ஒரு புறமும், சிலுவை அணிந்து மறுபுறமும் இருப்பதாய் இருந்தது. ருத்ராட்சை அணிந்த படம் காசியில் எடுக்கப்பட்டது என்றும், , சிலுவை அணிந்த படம் கேரளாவில் எடுக்கப்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்திருந்ததாக பரப்பப்படும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் “UP Elections 2017: ‘UP Does Not Need An Adopted Son,’ Priyanka Gandhi Hits Back At PM Narendra Modi” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 18, 2017 அன்று NDTV வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரியங்கா காந்தி முதன்முறையாக பொதுக்கூட்டத்தில் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

NDTV வெளியிட்டிருந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த படத்தில் பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை இடம்பெற்றிருக்கவில்லை; இலை வடிவ தகடு ஒன்றே இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து தேடியதில் இதே நிகழ்வில் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களை மற்ற ஊடகங்களின் செய்திகளில் காண முடிந்தது. உதாரணத்திற்கு இங்கே, மற்றும் இங்கே. அப்படங்களிலும் பிரியங்கா சிலுவை அணிந்திருக்கவில்லை; இலை வடிவ தகடையே அணிந்திருந்தார்.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் படத்தில் பிரியங்கா காந்தியின் கழுத்தில் காணப்படும் சிலுவை எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகின்றது. அதேபோல் அப்படமும் அண்மையில் கேரளாவில் எடுக்கப்பட்டதல்ல; 2017 ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் எடுக்கப்பட்டதாகும்.
இதனையடுத்து பிரியங்கா காந்தி ருத்ராட்சை மாலை அணிந்திருக்கும் படம் குறித்து ஆராய்கையில், 2019ம் ஆம் ஆண்டில் பிரியங்கா காந்தி வாரணாசி சென்றதாக வெளிவந்த செய்திகளில் வைரலாகும் படத்திலிருக்கும் அதே தோற்றத்தில் பிரியங்கா இருப்பதை காண முடிந்தது. அதுக்குறித்த செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Conclusion
வயநாடு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்திருந்ததாக கூறி பரப்பப்படும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். பிரியங்கா காந்தி அணிந்திருந்த இலை வடிவ தகடுக்கு பதிலாக சிலுவை எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் வைரலாகும் படமும் அண்மையில் கேரளாவில் எடுக்கப்பட்டதல்ல; 2017 ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Report By NDTV, Dated February 18, 2017
இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்