புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசியல் சதுரங்கம் மிகக் கடுமையாக நடைபெற்று வருகின்றது. ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா, பாஜக சார்பில் நியமிக்கப்பட்ட புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை செளந்தரராஜன் நியமனம் என்று பல்வேறு அரசியல் சார்ந்த பரபரப்பு நாடகங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதில், புதிதாக முதல்வர் நாராயணசாமி, வயதான பெண்மணி ஒருவரின் குற்றச்சாட்டை தவறாக மொழிபெயர்த்ததும் இடம் பெற்றுள்ளது.

Fact Check/Verification:
தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று புதுச்சேரி வந்திருந்தார்.
அங்கு, முதற்கட்டமாக சோலை நகர் கடற்கரையை ஒட்டிய மீனவ கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மீனவ மக்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார் ராகுல் காந்தி.
அவர்களுடைய பிரச்சினைகள், தீர்வு காண வேண்டிய விஷயங்கள் என பல்வேறு வகைகளில் அவர்களுடன் உரையாடினார்.இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தியின் மொழிப்பெயர்ப்பாளராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செயல்பட்டார்.
அப்போது, மீனவ பெண்களில் ஒருவரான அம்பிகா என்னும் வயதான பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் “கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடல்நீர் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுவதால் பெரிதும் பாதிப்படைகின்றனர். ஆனால், எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. நிவர் புயல் மழை காலங்களில் முதல்வரே எங்களை ஒரு முறையாவது வந்து பார்த்து இருக்கிறாரா?” என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பினார்.
ஆனால், இதனை ஆங்கிலத்தில் ராகுல் காந்தி மொழிமாற்றம் செய்து கூறிய நாராயணசாமி, அப்பெண் தன்னை குற்றம் சாட்டுவதை மறைத்து, அவர் தன்னைப் பாராட்டிக் கூறுவதைப் போல, ‘நிவர் புயல் காலகட்டத்தில் நான் இங்கு வந்து அவர்களைப் பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கியதைப் பற்றி அவர் கூறுகிறார்’ என்பதாக தவறாக மொழிபெயர்த்து தெரிவித்தார்.
தன்மேல் வைக்கப்பட்டப் புகாரை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ராகுல் காந்திக்கு தமிழ் மொழி தெரியாத காரணத்தினால் அப்படியே மாற்றி கூறிய சம்பவம் வீடியோவிலும் பதிவாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
உண்மையும் பின்னணியும்:
இந்நிலையில், வீடியோவில் முதல்வர் நாராயணசாமி தவறுதலாக மொழிப்பெயர்த்த செய்தி உண்மை என்றாலும், அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அதற்கான விளக்கம் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், “தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புரளி செய்தியில் அப்பெண் கூறியது முற்றிலும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பதற்கான சான்றை இப்புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் தொகுதியகளில் உள்ள கரையோர கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, மனித உயிர்கள், விலங்குகள் மற்றும் படகு, இயந்திரம் போன்ற சொத்துக்களின் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும் அப்பெண் நிவர் வந்த பொழுது முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வந்து பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் கூறியபொழுது
திரு நாராயணசாமி அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில் திரு ராகுல்காந்தி அவர்களிடம் நான் வந்தேன் என்று மாற்று மொழியில் பதிலளித்தார். அவர் தவறாக மொழி பெயர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திரு நாராயணசாமி அவர்கள் புயல் மற்றும் கொரோனா காலத்தில் மக்களிடையே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறியும் ஒரு சிறந்த முதலமைச்சராக விளங்கியது புதுவை மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Archived Link: https://archive.vn/lpgB0
மேலும், இதுகுறித்து பிபிசி செய்தி வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தான் தவறுதலாக ராகுல்காந்தியிடம் குறிப்பிட்டுவிட்டதாகவும் ஆனால் அதை முதல்வர் திருத்தி சரியாக ராகுல்காந்தியிடம் கூறியதாகவும் முதியவர் அம்பிகா விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாமும் அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவரைச் சார்ந்தவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. நம்மால் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றால், அம்பிகாவின் கருத்தையும் விரைவில் இங்கே இணைக்கிறோம்.
எது எப்படி இருந்தாலும், களத்தில் அப்பெண்மணி குற்றம் சாட்டிய போது, அதனை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்ப்பில் மாற்றிக் கூறிய வீடியோ உண்மை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
Conclusion:
ராகுல் காந்தியிடம், மீனவப் பெண்மணியான அம்பிகாவின் குற்றச்சாட்டினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தவறுதலாக மொழிமாற்றம் செய்ததாக வெளிவந்துள்ள வீடியோ உண்மையானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கியுள்ளோம்.
Result: True
Our Sources:
BBC Tamil: https://www.bbc.com/tamil/india-56108083
V.Narayanasamy: https://twitter.com/VNarayanasami
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)