Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் உபயோகித்து தனது ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார் விஜய் என்கிற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
கார்களின் காதலரான நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் கார் ஒன்றினை வாங்கினார். வாங்கியபோதே அதற்கு இறக்குமதி வரியாக ரூபாய் 1 கோடியே 88 லட்சத்து 11 ஆயிரத்து 045 (1,88,11,045) செலுத்தியிருந்தார்.
எனினும், அதனைப் பதிவு செய்ய முயன்றபோது தமிழ்நாடு வணிக வரித்துறையின் நுழைவு வரி செலுத்தப்பட்டு வழங்கப்படும் ஆட்சேபனை இல்லா சான்று வாங்கி வந்தால் மட்டுமே பதிவு செய்யப்படும் என்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 20 சதவீத வரியை மட்டும் செலுத்தி விட்டு வாகனத்தை பதிவு செய்து கொள்ளாலாம் என்கிற இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. ஜூலை 2012 ஆண்டு 23 ஆம் தேதியன்று 20 சதவீத வரியை, நீதிமன்ற ஆணைக்கேற்ப செலுத்திவிட்டு நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரினைப் பயன்படுத்தி வந்தார்.
இந்த வழக்கு 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்,முழு வரியையும் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழ்நிலையில், நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றின்மீது சாய்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து குறிப்பிட்ட காரில் புதுச்சேரி பதிவு எண் இருப்பதையும் வட்டமிட்டு, நடிகர் விஜய் தமிழ்நாடு பதிவு செய்யாமல் புதுச்சேரி பதிவு எண்ணுடன் கார் வைத்துள்ளார். அதற்கு கூட கையில் பணமில்லையா? என்கிற கேள்வியுடன் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் செய்து ரோல்ஸ் ராய்ஸ் காரை உபயோகிக்கும் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் குறித்த உண்மையறிய குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதன் முடிவில், குறிப்பிட்ட அப்புகைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான `சர்க்கார்’ திரைப்படத்திற்கான டெஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் என்பதும் நமக்கு உறுதியானது.
தொடர்ந்து, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் விஜய் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கார் கோஸ்ட் மாடலைச் சேர்ந்தது. மேலும், அந்த காரின் நிறம் கருப்பு அல்ல என்பது நமக்கு உறுதியானது.
புதியதலைமுறை செய்தியில் கூட குறிப்பிட்ட அவரது கோஸ்ட் மாடல் காருடன் விஜய் இருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கு தீர்ப்பு நகலை ஆராய்ந்தபோது, 20 சதவீத வரி செலுத்திய பிறகு அவரது கார் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதியானது. தனிநபர் பாதுகாப்பு கருதி அதனை நாங்கள் இங்கே வெளியிடவில்லை.
மேலும், அவரது ரோல்ஸ் ராய்ஸ் வாகனப்பதிவு குறித்து அரசு இணையதளத்தில் ஆராய்ந்தபோது, 06/2012 ஆகஸ்ட் அன்றே அவரது கார் பதிவு செய்யப்பட்டுள்ளதும், தமிழ்நாடு பதிவு எண் வழங்கப்பட்டுள்ளதும் நமக்கு உறுதியானது.
குறிப்பிட்ட வைரல் புகைப்படம், 2018ம் ஆண்டு சர்க்கார் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் என்பதும் நமக்கு உறுதியானது. தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரின் புதுச்சேரி பதிவு எண் மூலமாக அதன் உரிமையாளர் குறித்து ஆராய்ந்தபோது அந்த வாகனம் கடந்த 2013ம் ஆண்டு 19/09 அன்று புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டிருப்பது நமக்கு உறுதியானது.
மேலும், தனியார் நகைக்கடை ஒன்றின் பெயரில் அந்த கார் பதிவு செய்யப்பட்டிருப்பதும் நமக்கு உறுதியானது. குறிப்பிட்ட நகைக்கடையின் கிளை ஒன்றின் 2017 ஆம் ஆண்டு திறப்பு விழாவின்போது வைரல் புகைப்படத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் இருப்பதும் நமக்கு தேடலின் முடிவில் கிடைத்தது.
சினிமா உலகைப் பொறுத்த வரையில், இதுபோன்ற போட்டோஷூட், சீன்களுக்கு சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் வசதிகளும் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் செய்து ரோல்ஸ் ராய்ஸ் காரை உபயோகிக்கும் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter: https://twitter.com/ChennaiTimesTOI/status/948474407235731456?s=20
Puthiyathalaimurai: https://youtu.be/JZjsLNkYAQs
Thanthi Tv: https://youtu.be/-n847TcEboM
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 13, 2025
Ramkumar Kaliamurthy
October 30, 2024
Vijayalakshmi Balasubramaniyan
September 5, 2024