Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மருத்துவமனை படுக்கை ஒன்றில் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டு அமர்ந்திருக்கும் வயதான மனிதர் ஒருவரின் புகைப்படம் மறைந்த பாதிரியார் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பிறந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்தவர். ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்கிற அவர், காலப்போக்கில் மக்களின் மனதில் ஸ்டேன் சுவாமியாக இடம் பெற்றார். ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சமூகப் போராளி ஸ்டேன் சுவாமி என்றே அவர் அறியப்படுகிறார்.
ஸ்டேன் சுவாமி மீது தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர், 2018 ஆம் ஆண்டு மகராஷ்டிராவின் பீமா கோரேகான் வன்முறைக்கு தூண்டுதலாக இருந்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தேச துரோக வழக்கில் கடந்த 2020, அக்டோபரில் கைது செய்யப்பட்டார். 84 வயதான ஸ்டேன் சுவாமி, கடைசி மூச்சு வரை எளிய மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தவர்.
கடந்த ஜூன் மாதம் இவர் முதலில் அரசு மருத்துவமனையிலும், அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். தொடர் உடல் நலக்குறைவால் அவருக்கு பெயில் கேட்டு போராடி வந்தது ஸ்டேன் சுவாமி தரப்பு. ஆனால், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், “எவ்வளவு மோசமான கொடிய அரக்கனோட ஆட்சியில வாழ்ந்துட்டு இருக்கோம் னு இதை விட வேற என்ன காட்சி வேண்டும். 84 வயது மறைந்த சமூக செயற் பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு ஆழ்ந்த இரங்கல்” என்றும், இன்னும் பல்வேறு வாசகங்களுடனும் சமூக வலைத்தளங்களில் மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள முதியவர் ஒருவரின் புகைப்படம் ஸ்டேன் சுவாமி என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மருத்துவமனை படுக்கை ஒன்றில் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டிருக்கும் வயதான மனிதர்தான் ஸ்டேன் சுவாமி என்று பரவும் புகைப்படத்தின் உண்மையும், பின்னணியும் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, குறிப்பிட்ட வைரல் புகைப்படம் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியுடையது அல்ல என்பது உறுதியாகியது.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் இருக்கும் முதியவர், 92 வயதான பாபுராம் பல்வான் சிங். உத்திர பிரதேசத்தின் எட்டா சிறைச்சாலையில் கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வந்தவர்.
13 மே 2021 அன்று NDTV வெளியிட்டுள்ள செய்தியில் பாபுராம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கடந்த மே மாதமே வைரலாகிய நிலையில், உத்திர பிரதேச சிறைத்துறை உயர் அதிகாரியான ஆனந்த் குமார் இதனை கவனத்தில் கொண்டுவந்து, சிறை வார்டன் அசோக் யாதவ் என்பவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும், இதில் தொடர்புடைய அனைத்து காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறிப்பிட்ட இப்புகைப்படமே சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
பல வருடங்களாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி, மும்பை பந்த்ராவில் அமைந்துள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை மதியம் (05/07/2021) உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை படுக்கை ஒன்றில் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டிருக்கும் வயதான மனிதர்தான் ஸ்டேன் சுவாமி என்று பரவும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter: https://twitter.com/DgPrisons/status/1392744228766117891?s=20
News Checker Hindi: https://newschecker.in/hi/fact-check-hi/stan-swamy-viral-image-false
The Indian Express: https://indianexpress.com/article/india/father-stan-swamy-dead-elgar-parishad-case-nia-probe-7390722/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)