Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வாக்கு திருட்டு சர்ச்சை தொடர்பாக உத்திரப்பிரதேச பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டார்.
இத்தகவல் தவறானதாகும். மார்க்கெட் விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த சண்டையே இவ்வாறு பரப்பப்படுகின்றது. லோனி தொகுதி MLA நந்த் கிஷோர் குர்ஜாரும் இத்தகவலை மறுத்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியதை தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “வாக்கு திருட்டு ரிசல்ட் வரத் துவங்கிவிட்டது..!! சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் பாஜகவின் லோனி MLA நந்த்கிஷோருக்கு அடி..!!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வாக்கு திருட்டு சர்ச்சை தொடர்பாக உத்திரப்பிரதேச பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் இந்தியா டுடே NE ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசியாபாத்தில் உள்ள சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் கடந்த திங்களன்று (ஆகஸ்ட் 11) மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
வியாபாரிகளுக்கிடையே நடந்த கூட்டத்தில் கடை ஒதுக்குவதில் தகராறு ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடந்ததாகவும், இதில் ஒருவர் அடிபட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் வீடியோவில் வெள்ளை நிற பைஜாமா குர்தா அணிந்திருக்கும் நபரின் பெயர் ஹரீஷ் சௌத்ரி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹரீஷ் சுட்டதில் சச்சின் என்ற தொழிலாளி அடிபட்டதாகவும், இதனையடுத்து சிலர் ஹரீஷையும் அவரின் ஆட்களையும் பிடிக்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் தப்பித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் காசியாபாத் காங்கிரஸ் தலைவர் பிஜேந்திரா யாதவ் இச்சம்பவம் குறித்து கூறியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது; வியாபாரிகளுக்கும் கமிஷன் ஏஜெண்டுகளுக்கும் இடையே சந்திப்பு நடந்தது. வாகன நிறுத்தம், கழிவுநீர் வெளியேற்றம் ஆகிய பிரச்சனைகள் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கையில் ஹரீஷ் எழுந்து நாற்காலியை எங்கள் மீது வீசினார். அவர் என்னை கீழே தள்ளினார். அவருடைய ஆட்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசத் தொடங்கினர், துப்பாக்கி சூடு நடந்தது.
ஹரீஷ் சௌத்ரி இச்சம்பவம் குறித்து கூறியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது; எனது மகன் மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் அனுமதியுடன் அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய லைசென்ஸ் வாங்கியுள்ளான். அவன் மூன்று மாதங்களாக அங்கே வேலை செய்து வருகின்றான். கடந்த ஞாயிறன்று அவன் வேலை செய்ய வரும்போது தடுத்து நிறுத்தப்பட்டான். அங்கு வேலை செய்ய ரூ.50000 லஞ்சம் தர வேண்டும் என்று பிஜேந்திரா ஃபோனில் மிரட்டினார். திங்களன்று நாங்கள் மார்க்கெட்டுக்கு செல்லும்போது அவர்கள் எங்கள் குடும்பத்தினர் குறித்து தவறாக பேசினர். நாங்கள் போராட முற்படும்போது அவர்கள் துப்பாக்கியை நீட்டினர். என்னை காப்பாற்றிக்கொள்ள அவர்களிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கினேன். பின்னர் கூட்டத்தினர் விரட்டும்போது அந்த துப்பாக்கியால் மேலே சுட்டேன்.

இதனையடுத்து தேடுகையில் காசியாபாத் போலீஸ் கமிஷ்னரேட் தரப்பில் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் செய்தி அறிவிப்புடன் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் படங்களும் பகிரப்பட்டிருந்தது. செய்தி அறிவிப்பில் ஹரீஷ் சௌத்ரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் தெரிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் வாக்கு திருட்டு சர்ச்சைக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது. அதேபோல் வீடியோவில் துரத்தப்படும் நபர் பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் அல்ல; ஹரீஷ் சௌத்ரி ஆவார்.
MLA நந்த் கிஷோர் குர்ஜாரும் வைரலாகும் வீடியோவுக்கும் தனக்கும் தொடர்பில்லை என தெளிவுப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது. சம்பவம் நடந்த தினத்தன்று அவர் லக்னோவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு சர்ச்சை தொடர்பாக பாஜக MLA நந்த் கிஷோர் குர்ஜார் சாகிபாபாத் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
மார்க்கெட் விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த சண்டையே இவ்வாறு பரப்பப்படுகின்றது. லோனி தொகுதி MLA நந்த் கிஷோர் குர்ஜாரும் இத்தகவலை மறுத்துள்ளார். சம்பவ நேரத்தில் அவர் லக்னோவில் இருந்துள்ளார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
News report by India Today NE, dated August 11, 2025
News report by Times of India, dated August 12, 2025
X Post by Deputy Commissioner of Police (Trans Hindon) Commissionerate Ghaziabad, Dated August 11, 2025
X Post by Jitendra Gautam, Dated August 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025