1989 சட்டசபை அமளியில் ஜெயலலிதா நடித்த நடிப்பை விட கங்கனாவின் நடிப்பு குறைவே என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘தலைவி’ எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டு, அப்படம் நேற்று(10/09/2021) திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சமுத்திரக்கனி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
இப்படத்தை கண்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டசபை சேலை கிழிப்பு நாடகத்தை இன்னும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம். புரட்சி தலைவி அம்மாவின் நடிப்போடு ஒப்பிடுகையில் இது ஒரு மாற்று குறைவுதான்” என்று கூறியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
1989 சட்டசபை நிகழ்வு என்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான மறக்க முடியாத நிகழ்வாகும். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வராக கருணாநிதியும் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவும் அவையில் அமர்ந்திருந்தனர்.
முதல்வரும் நிதி அமைச்சருமான கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது’ என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது. தன்னுடைய தொலைப்பேசி ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்றும் உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் ஜெயலலிதா.
அப்போது நடந்த களேபரத்தில், பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கருணாநிதி மூக்கு கண்ணாடி உடைந்தது; ஜெயலலிதா சேலை கிழிந்தது. சட்டசபையோ அமளி துமளி ஆனது. இதன்பின் தான் முதல்வராக ஆன பின்பே சட்டமன்றத்துக்குள் வருவேன் என்று சூளுரை உரைத்தார் ஜெயலலிதா. அவ்வாறே 1991 சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வரானப் பின்பே சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
இவ்வளவு வரலாற்று பின்னணி உடைய இந்த நிகழ்வில் ஜெயலலிதா (பொய்யாக) நடித்தார் என்றும், அதுவும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரே இதை கூறினார் என்றும் பரவும் தகவல் எவ்வாறு உண்மையாக இருக்க முடியும் எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
ஆகவே வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து தேடினோம். இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யாக எடிட் செய்யப்பட்டது எனும் உண்மை நமக்கு தெரிய வந்தது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைய தினம் ‘தலைவி’படம் பார்த்த பின்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் தலைவி படத்தில் சில காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதிலும் ஜெயலலிதா எம்,ஜி.ஆரை அவமைதிப்பது போல் காட்சி உள்ளது; அக்காட்சி தவறானது, அதை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தகவலை நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தது.
நியூஸ் 7 தமிழின் வெளியிட்ட இந்த நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டு மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. மேலும் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் குறித்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு கேட்டோம். அவரும் “இந்த நியூஸ்கார்ட் போலியானது” என்பதை நமக்கு உறுதி செய்தார்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் பறிமுதல் செய்ததா திமுக அரசு?
Conclusion
1989 சட்டசபை அமளியில் ஜெயலலிதா நடித்த நடிப்பை விட கங்கனாவின் நடிப்பு குறைவே என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)