கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருக்கின்றது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கத் தொடங்கினர். இதற்கு பாஜக கூட்டணினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுக்குறித்து கடந்த ஜூன் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பாஜக சார்பில் கேள்வியும் எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி என்ற பொருள் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கிறோம். ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைக் கண்டு மிரள வேண்டாம். அதைப் பயன்படுத்திக் கொண்டே இருப்போம்” என்றார்.
இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது மத்திய அரசு வெளியிட்ட விவரக் குறிப்பில், எல்.முருகன் பிறந்த நாமக்கல் மாவட்டத்தை ‘கொங்கு நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்கு நாடு எனும் புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதன்பின் கொங்கு நாட்டை தனி மாநிலமாக பிரிப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கார சாரமான விவாதங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்த குழப்பத்திற்கு அடித்தளமிட்ட தினமலருக்கு எதிராக போராட்டங்களும் கண்டனங்களும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் “கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருப்பதாக தகவல்” என்று புதிய தலைமுறை செய்தி ஒன்றை வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைகளுடன் நிற்பது இந்திய வீராங்கனைகள் அணியா?
Fact Check/Verification
“கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருப்பதாக தகவல்” என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்பதை உறுதி செய்ய புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்த நியூஸ்கார்ட் குறித்து தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்ட் புதிய தலைமுறையில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. இதன்பின் புதிய தலைமுறையின் டிஜிட்டல் துறையின் தலைவரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர்,
“இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை”
என்று விளக்கமளித்தார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது, “கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருப்பதாக தகவல்” என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகின்றது.
தமிழகத்தை இரண்டாகப் பிரித்து, கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் ஏற்படுத்தி தர வேண்டும் எந்த ஒரு கட்சியோ அல்லது அமைப்போ அதிகாரப்பூர்வமாக கோரிக்கை ஏதும் இதுவரை வைக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் இதுக்குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. ஆகவே தமிழ்மக்கள் இம்மாதிரியான ஆதாரமற்ற செய்திகளையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
Also Read: தஞ்சை பெரிய கோயிலுக்கு எதற்கு பராமரிப்பு செலவு என்றாரா ஜோதிகா?
Conclusion
“கொங்கு நாடு எனும் புதிய மாநிலம் உருவாகவிருப்பதாக தகவல்” என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் பொய்யான ஒன்று என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)