ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில், “ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பு வெளியிட்டிருக்கின்றது. அதன்படி ஏடிஎம் கார்டு செருகுவதற்கு முன் கேன்சல் என்ற பொத்தானை இருமுறை அழுத்த வேண்டும். உங்களுக்கு முன்னதாக ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தியவர் உங்களது ஏடிஎம் பின் நம்பரை திருடுவதற்கு ஏதாவது முயற்சி செய்திருந்தால் அந்த முயற்சியை இது முறித்து விடும். எனவே உங்களது பின் நம்பர் திருடு போகாது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் கார்டை பயன்படுத்துவதற்கு முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… வைரலாகும் செய்தி உண்மையானதா?
Fact Check/Verification
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிந்தது.
PIB Factcheck வைரலாகும் இத்தகவலை மறுத்து ஏப்ரல் 5, 2022 அன்று டிவீட் ஒன்றை செய்துள்ளது. அந்த டிவீட்டில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது. இவ்வாறு ஒரு அறிக்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை என்று PIB Factcheck தெரிவித்துள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் இதே மறுப்பு செய்தியை PIB Factcheck பதிவு செய்துள்ளது.
Also Read: மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரை முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதாக பரவும் வீடியோ!
Conclusion
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tweet, from @PIBFactCheck, on April 05, 2022
Tweet, from @PIBFactCheck, on June 10, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)