பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு அனிதா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததாக கலாட்டா தமிழில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

Fact Check/ Verification
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து நடத்தி வருகிறார்.
இந்த வருடம் நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் நான்கானது இறுதிக் கட்டத்தை நோக்கி மிகவும் பரப்பரப்பாக போய் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் முதலில் 16 பேர் கலந்துக் கொண்டனர். பின்னர் இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தனர்.
ஆக மொத்தம் 18 பேர் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் வாரத்திற்கு ஒருவராக வெளியேறி மிச்சம் 8 பேர் தற்போது உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கடைசியாக வெளியேறியவர் அனிதா சம்பத். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பெரும்பான்மையான மக்களின் வெறுப்பை சம்பாதித்த இவர், பின்னர் அவர்களின் பேராதரவை சம்பாதித்து இறுதிப்போட்டி வரை வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டார்.
கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய அதிகப்பட்ச கோபம் காரணமாக மக்களிடையே செல்வாக்கிழந்ததால், நேற்று (27/12/2020) போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் அனிதா சம்பத் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் மக்களுக்கு நன்றி தெரிவித்ததாக செய்தி ஒன்றை கலாட்டா தமிழ் வெளியிட்டுள்ளது.
கலாட்டா தமிழ் வெளிட்ட இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது சமூக ஊடகங்களில் மாபெரும் பேசுப் பொருளாக விளங்கி வருகிறது. அதிலும் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் பல ஆரூடங்கள் கூறப்படுவது வழக்கமான ஒன்றேயாகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுபவர்கள் குறித்த நிகழ்ச்சி சனிக்கிழமையே ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், இதுக்குறித்த அதிகாரப் பூர்வமான தகவல் ரகசியமாக வைத்திருக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் முடிவிலேயே தெரிவிக்கப்படும்.
ஆனால் அதற்கு முன்பே யார் வெளியேற்றப்பட்டார் என்று செய்தி வெளியிடுவதை பெரும்பான்மையான யூடியூப் சேனல்கள் வழக்கமாக கொண்டுள்ளன.
இதன் வரிசையில் கலாட்ட தமிழ் சனிக்கிழமை (26/12/2020) அன்று, அனிதா சம்பத் பிக்பாஸிலிருந்து வெளியேறி விட்டதாகவும், தனது ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்ததாகவும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தப்பின் அனிதா சம்பத் வெளியேறினார் எனும் தகவல் உண்மைதான் என்பது நமக்கு தெளிவாகியது. ஆனால் அனிதா நன்றி தெரிவித்தார் எனும் தகவல்தான் நம்பும்படியாக இல்லை.
இதற்கு காரணம் என்னவென்றால், கலாட்டா தமிழில் காண்பிக்கப்பட்ட டிவிட்டர் பதிவானது சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டிருந்தது. இது பிக்பாஸ் விதிமுறைக்கு எதிரானதாகும்.
ஆகவே கலாட்டா தமிழில் காண்பிக்கப்பட்ட டிவிட்டர் பதிவு குறித்து தீவிரமாகத் தேடினோம். அவ்வாறு தேடியதில் அந்த டிவிட்டர் பதிவானது அனிதா சம்பத் அவர்களின் டிவிட்டர் பதிவல்ல எனும் உண்மை நமக்கு தெளிவாகியது.
கலாட்டா தமிழில் காட்டப்பட்ட டிவிட்டர் பதிவு:
உண்மையில் கலாட்டா தமிழில் காண்பிக்கப்பட்ட டிவிட்டர் பதிவானது அனிதா சம்பத் பெயரில் இயங்கும் பொய் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்டதாகும்.
வாசகர்களின் புரிதலுக்காக அனிதா சம்பத்தின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் பதிவிட்ட பொய்க்கணக்கையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Conclusion
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு அனிதா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததாக கலாட்டா தமிழில் வெளிவந்தச் செய்தி தவறானதாகும். இதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Galatta Tamil: https://www.youtube.com/watch?v=saQpsn-k5z0&feature=youtu.be
Anitha Sampath Twitter Handle: https://twitter.com/OfficialAnitha?s=09
Anitha Sampath Twitter Handle (Parody): https://twitter.com/anithasampath_/status/1342741098813247492
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)