Claim: நெல்லை இளைஞர் ஒருவர் சென்னை வெள்ளத்தை நையாண்டி செய்து பேசிய வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது; அதில் ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை இளைஞர் ஒருவர் சென்னை வெள்ளத்தை நையாண்டி செய்து பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அப்பா என்ன அடி நெல்லை குசும்பு என்பது இதுதானா” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
Fact Check/Verification
நெல்லை இளைஞர் ஒருவர் சென்னை வெள்ளத்தை நையாண்டி செய்து பேசியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, குறிப்பிட்ட அந்த வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
குறிப்பிட்ட வீடியோவின் முழுப்பகுதியை நாம் சன் நியூஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் தேடிக்கண்டறிந்தோம். கடந்த நவம்பர் 11, 2021 அன்று ”கொட்டித்தீர்த்த கனமழை; ஊருக்குள் புகுந்த செம்பாக்கம் ஏரியின் உபரி நீர் | திருமலை நகர் | தாம்பரம்” என்கிற தலைப்பில் இடம்பெற்றிருந்த வீடியோவின் முழுப்பகுதியில் இந்த வைரல் வீடியோ காட்சியும் இடம்பெற்றிருப்பதை நம்மால் அறிய முடிந்தது.
குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நபரிடம் கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் பார்வையிட்டும் தீர்வு காணவில்லையா? என்பதாக ஊடகவியலாளர் எழுப்பும் கேள்விக்கு பதிலளித்த அந்த நபர், அரசியல்வாதிகள் உட்பட பலரும் வந்து பார்த்து சென்றாலும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. திருமலை நகரில் ஆண்டுதோறும் இதே நிலைமைதான். இந்த நிலைமைக்கு ஒரே தீர்வு கால்வாய் அகலப்படுத்தப்படுவதுதான் என்பதாக பதிலளித்துள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட நபர் பேசும் பகுதியை வெட்டி எடுத்து, அதில் அவர் “திராவிட கட்சிகள்தான் மக்களுக்காக இந்த சேவையை செய்துள்ளனர். ஏரி, குளங்களின் தண்ணீர் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றடைய உதவியுள்ளனர்” என்று நையாண்டியாக பேசுவதாக வைரலாகும் வீடியோவில் ஆடியோவையும் மாற்றியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?
Conclusion
நெல்லை இளைஞர் ஒருவர் சென்னை வெள்ளத்தை நையாண்டி செய்து பேசியதாகப் பரவும் வீடியோ பழையது மற்றும் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
YouTube Video From, Sun News Tamil, Dated November 11, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)