சென்னை மழை வருணபகவானின் தண்டனை என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. எப்போதுமே வெள்ளக் காடாகும் சென்னை இந்த வருடமும் அதே நிலையை எட்டியுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தமிழகம் முழுவதுமே மழை மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இந்நிலையில், “சென்னை மழை வருணபகவானின் தண்டனை. திமுகவிற்கு வாக்களித்த சென்னை மக்களை மழையின் வெள்ளத்தால் வருணபகவான் தண்டித்துள்ளார்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இந்தியா க்ளிட்ஸ் யூடியூப் செய்தி சேனலுக்கு பேட்டியளித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை வெள்ளம் என்று குஜராத் வெள்ள பாதிப்பு படத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி
Fact check/ Verification
சென்னை மழை திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு வருணபகவானின் தண்டனை என்பதாக அர்ஜூன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்ததாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அது குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, இந்தியா க்ளிட்ஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலோ அல்லது யூடியூப் பக்கத்திலோ அர்ஜூன் சம்பத்தின் சமீபத்திய வீடியோ இந்த வாசகங்களுடன் இடம்பெற்றுள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த பேட்டியும் இடம்பெறவில்லை.
மேலும், அர்ஜூன் சம்பத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் அதுபோன்று எந்த வாசகங்களும் இடம்பெறவில்லை.
எனவே, இதுகுறித்து நாம் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்ற எந்த பேட்டியையும் நான் அளிக்கவில்லை. நாளையில் இருந்து சென்னை மக்களுக்கான உணவு, உறைவிடம் போன்ற மீட்புப் பணிகளில் இந்து மக்கள் கட்சி ஈடுபடவிருக்கிறது. சென்னை மக்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் நான் அவதூறாக பேசவில்லை.
திராவிட ஆட்சிக்காலத்தில் சென்னை சாலைகள், நீர்வழித்தடங்களை ஒழுங்கமைவு செய்யாததன் விளைவுதான் இந்த மழை வெள்ளமே தவிர, இது குறித்து நான் மக்களை எந்தவிதத்திலும் காயப்படுத்தும் வகையிலான வாசகங்களையோ, பேட்டியையோ கொடுக்கவில்லை.” என்று விளக்கமளித்தார்.
மேலும், இந்த குறிப்பிட்ட நியூஸ் கார்டும் போலியானது என்பதை இந்தியா க்ளிட்ஸ் தரப்பில் உறுதி செய்துகொண்டுள்ளோம். அவர்களுடைய மற்றொரு செய்தியில் அர்ஜூன் சம்பத்தின் கூறியது போன்று இந்த வாசகங்களை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Conclusion:
சென்னை மழை திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு வருணபகவானின் தண்டனை என்பதாக அர்ஜூன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்ததாகப் பரவும் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)