Fact Check
‘பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்’.. உண்மையை கூறிய ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ.
Fact
வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். மற்றவர்கள் நினைப்பதாக ஸ்டாலின் கூறிய கருத்தே எடிட் செய்யப்பட்டு இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“Stalin Model Core.. உண்மைய சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும். வாழ்த்துகள் வாழ்த்துகள் mkstalin!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் ஏதோ ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செஞ்சோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவதாய் இருந்தது.
அஇஅதிமுகவின் ஐடிவிங் உட்பட அதிமுகவை சார்ந்த பலர் இவ்வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்’ எனும் வரிகளுடன் திமுக சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் நேற்றைய முன்தினம் பாலிமர் நியூஸ் யூடியூப் பக்கத்தில் அன்புக்கரங்கள் திட்ட தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவின் 4:30 நேரத்தில், “அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செஞ்சோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள்…” என்று முதலமைச்சர் பேசி இருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் முன்பகுதியில் வரும் ‘அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள்’ என்ற வரியையும், பின்பகுதியில் வரும் ‘என்று சிலர் நினைக்கிறார்கள்’ என்கிற வரியையும் எடிட் செய்து நீக்கிவிட்டு வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.
தொடர்ந்து தேடுகையில் இந்து தமிழ், தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட ஊடகங்களிலும் மேற்கண்ட முதலமைச்சரின் பேச்சு குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் மற்றவர்கள் நினைப்பதாக கூறி வைரலாகும் வீடியோவில் காணப்படும் கருத்தை முதலமைச்சர் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



Also Read: திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடினாரா விஜய்?
Conclusion
பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். மற்றவர்கள் நினைப்பதாக ஸ்டாலின் கூறிய கருத்தே எடிட் செய்யப்பட்டு இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Polimer News, dated September 15, 2025
Report by Hindu Tamil, dated September 15, 2025
Report by Dinamalar, dated September 15, 2025
Report by Daily Thanthi, dated September 15, 2025