தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் தேசியக்கொடியை அகற்றி காவிக்கொடியை ஏற்றியது போலவே விரைவில் ஏற்றுவோம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிகள் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிந்து வருவதற்கான தடை தொடர்பான விவகாரம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு இனத்தைச் சார்ந்த மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இது பெரும் மதக்கலவரமாக உருவெடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷிவமோகாவில் கல்வி வளாகத்தில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடியை ஒரு பிரிவு போராட்டக்குழு மாணவர்கள் ஏற்றியதாக வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. ஒரு மாணவர் கொடிக்கம்பத்தில் ஏறி காவிக்கொடியை கல்வி வளாகத்திற்குள் ஏற்றுகிறார். குறிப்பிட்ட செய்தி உண்மையில்லை என்பதாக ஷிவமோகா எஸ்.பி, ஏ.என்.ஐயிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, “கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் இன்று தேசிய கொடியை அகற்றி, காவிக் கொடி ஏற்றியது போல விரைவில் தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஹெச்.ஐ.வி வைரஸை பரப்புகின்றனரா?
Fact Check/Verification
தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று கதிர் நியூஸ் ஊடகத்தளம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், அர்ஜூன் சம்பத் சார்பில் இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தமிழகத்திலும் காவிக்கொடியை ஏற்றுவோம் என்று வைரலாகும் குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது என்கிற செய்தி ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Conclusion
தமிழகத்திலும் காவிக் கொடியை ஏற்றுவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)