Claim: மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்சாதி என்று இழிவாக பேசினார் சீமான்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். சீமான் பேசிய கருத்தில் சிறு பகுதியை மட்டும் வெட்டி இத்தகவல் பரப்பப்படுகின்றது.
“மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில், “மாட்டுப்பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி.. இதுதான் இந்த நாட்டின் கட்டமைப்பு” என்று சீமான் பேசுவதாக இருந்தது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து சீமானை எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கும்பமேளாவில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்சாதி என்று சீமான் இழிவாக பேசியதாக பரப்பப்படும் வீடியோவில் நியூஸ் 18 தமிழ்நாடின் டெம்ப்ளேட் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வீடியோவை வெளியிட்டதா என ஆராய்ந்தோம்.
இத்தேடலில் “இந்தியாவில் தான்… கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று தலைப்பிட்டு நேற்று (ஜனவரி 21, 2025) நியூஸ் 18 தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தை காண முடிந்தது.
இவ்வீடியோவில், “கோமியத்தை மருத்துவமனைகளுக்கு லிட்டர் கணக்கில் கொடுத்து குடிக்க கூறவேண்டும்” என்று சீமான் கேலியாக கூறி இருப்பதை காண முடிந்தது. இதை தொடர்ந்து “இந்த பைத்தியங்களிடம் நாடும், நாட்டு மக்களும் சிக்கி கொண்டோம்.. வேறு என்ன செய்ய முடியும்?.. மாட்டுப்பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி.. இதுதான் இந்த நாட்டின் கட்டமைப்பு.. இந்தியாவில்தான் நெய் எறிக்கப்படுகின்றது, பால் கொட்டப்படுகின்றது, மூத்திரம் குடிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் நீ சிக்கி கொண்டாய், நானும் சிக்கிக்கொண்டேன்” என்று அவர் பேசியிருப்பதையும் காண முடிந்தது.
இவ்வீடியோவின் நடுவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி, ‘இந்தியாவில் தான்’ எனும் வார்த்தையை ‘மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி’ என்று மாற்றி எடிட் செய்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.


சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாக பேசி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு சீமான் அளித்த பதிலையே எடிட் செய்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
சீமானின் இந்த பதில் நியூஸ் 18 தமிழ்நாடு தவிர்த்து சன் நியூஸ், மாலை முரசு, ABP நாடு உள்ளிட்ட ஊடகங்களிலும் வந்திருப்பதை காண முடிந்தது.
Also Read: எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகைப்படத்திற்கு பனையூரில் மாலை அணிவித்த விஜய் என்று பரவும் தகவல் உண்மையா?
Conclusion
மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்சாதி என்று சீமான் இழிவாக பேசியதாக பரப்பப்படும் வீடியோவானது எடிட் செய்யப்பட்டதாகும். சீமான் பேசிய கருத்தில் சிறு பகுதியை மட்டும் வெட்டி, இந்தியாவில் தான்’ எனும் வார்த்தையை ‘மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி’ என்று மாற்றி அவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
X post by News 18 Tamilnadu, Dated January 21, 2025
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்