பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த புதனன்று ( 08/12/2021) விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுக்குறித்து பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்றும் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில், “மோடியை விசாரிக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தின் எழுத்துரு (Font) அளவு மட்டும் வழக்கத்திற்கு மாறாக பெரியதாக இருப்பதை நம்மால் காண முடிந்தது.
அதேபோல் சுப்ரமணியன் சுவாமி பெயரை குறிப்பிடும்போது, அவரின் நிலை அல்லது தொழில் அடையாளம் ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை நம்மால் உணர முடிந்தது.
இருப்பினும் இந்த நியூஸ்கார்டை பலர் உண்மையானது என்று நம்பி பகிர்ந்து வருவதால், இதை முறைப்படி ஆய்வுசெய்து இதுக்குறித்து விளக்க முடிவு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
“பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணத்தில் சந்தேகம் எழுகிறது; உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி பேசியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜ் அவர்களைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை நமக்கு உறுதி செய்தார்.
Also Read: டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைச் சூட்டியுள்ளதா ஒன்றிய அரசு?
Conclusion
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)