Fact Check
திண்டுக்கல் சாலையில் தென்னை மட்டைக்காக வளைத்துப் போடப்பட்டதா சாலையின் மீதான கோடு?
திண்டுக்கல் சாலை ஒன்றில் தார் ரோடு போடும்போது அதில் தென்னை மட்டை சிக்கிக் கொண்டதால் அதை எடுக்கமுடியாமல் அதைச் சுற்றி வளைத்து சாலையில் இடப்படும் வெள்ளைக்கோடு போடப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாலை ஒன்றில் தென்னை மட்டை ஒன்றினைச் சுற்றி வளைத்து வெள்ளை நிற சாலைக்கோடு வரையப்பட்டுள்ள புகைப்படம் மீம்ஸ் மற்றும் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
அதுகுறித்த புகைப்படத்துடன், “திண்டுக்கல் – மணியக்காரன் பட்டி வழியில் உள்ள சாலையில் இந்த தென்னை மட்டைக்கு மரியாதை செய்யப் பட்டு உள்ளது” என்றும் இன்னும் பல்வேறு வாக்கியங்களுடன் குறிப்பிட்ட வளைகோடு சாலை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
திண்டுக்கல் சாலை ஒன்றில் தென்னை மட்டை தார் ரோட்டில் மாட்டிக்கொண்டதால் அதை வளைத்து சாலையில் போடப்படும் வெள்ளைக்கோடு வரையப்பட்டுள்ளதாகப் பரவும் தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மை நிலை என்ன என்பது குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட புகைப்படம், திண்டுக்கல் மாவட்டத்தின் மணியக்காரன்பட்டியில் அமைந்திருக்கும் சாலை என்பது நமது பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக உறுதியானது. இதுகுறித்து, முன்னணி செய்தித்தளங்களும் விளக்கம் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து, திண்டுக்கல் பகுதி அரசு அலுவலர்கள், சாலை மேம்பாட்டு பிரிவு அலுவலர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
அதனடிப்படையில், குறிப்பிட்ட அச்சாலையில் காவிரி நீர் திட்டத்திற்கான குழாய் ஒன்று தரைக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் மீது வால்வு அமைக்க சிறு பள்ளம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இடத்தில் குழாய் மற்றும் சிறு பள்ளம் போன்ற அமைப்பு இருப்பதால், வாகனங்கள் செல்லும்போது அதன்மீது தவறுதலாகச் சென்றுவிடாமல் இருக்க சாலைக்கோடானது சாலை மேம்பாட்டு பணியினரால் வளைந்து வரையப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும், குறிப்பிட்ட அக்குழாய் குறித்த மக்களின் கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறிப்பிட்ட அந்த குழாய் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சாலையில் கோடு வரையப்பட்டிருந்தாலும் கூட வேகமாக வரும் வாகனங்கள் சில தவறுதலாக சிறு விபத்துக்களுக்கு உள்ளாவதைத் தடுக்க தென்னை மட்டை மூலமாக அந்த சிறு தொட்டி மற்றும் காவிரிநீர்க்குழாயை தென்னை மட்டை வைத்து வாகன ஓட்டிகளுக்கான அடையாளத்திற்காக மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடமும் அங்கு முறையான மூடப்படக்கூடிய வகையிலான அமைப்பை ஏற்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Conclusion:
திண்டுக்கல் சாலை ஒன்றில் தென்னை மட்டை தார் ரோட்டில் மாட்டிக்கொண்டதால் அதை வளைத்து சாலையில் போடப்படும் வெள்ளைக்கோடு வரையப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல் தெளிவான விளக்கமின்றி பரப்பப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Dindigul Government officials
public opinion in telephone conversation
Facebook Link: https://fb.watch/v/BROLOJEp/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)