திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்புப்பணத்தில் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி என புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சட்டமன்றத் தேர்தலை முன்பெல்லாம் கட்சிகள் ஒலிப்பெருக்கி பிரச்சாரங்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் எதிர்கொண்ட காலகட்டம் மாறி ஒரு கட்சி மற்றொரு கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்ச்செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவதன் மூலமாக எதிர்கொண்டு வருகின்ற டிஜிட்டல் காலகட்டம் இது.
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவாக நெருங்கி வருகின்ற நிலையில், இதுபோன்ற சமூக வலைத்தளப் பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளன.
இந்நிலையில், “இந்தியாவின் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதி கட்சி, திமுக ஸ்டாலின் போன்றோர் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்த பணம் அனைத்தும் செல்லாக்காசாகி விட்டது. ஆதாரத்துடன் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே” என்கிற வாசகங்களுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கருப்புப்பணம் குறித்த அறிவிப்பை ஜூலியன் அசாஞ்சே வெளியிடுவது போன்ற படத்துடன் பரவும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
குறிப்பிட்ட பதிவில் பதுக்கப்பட்ட பணத்தின் மதிப்பு டாலர் மதிப்பிலோ, ரூபாய் மதிப்பிலோ குறிப்பிடப்படவில்லை.

மேலும், இதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு, இதே புகைப்படத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிப் பெயர்களுக்குப் பதிலாக பாஜகவின் பெயர் இடம்பெற்று பகிரப்பட்டதும் அதை ஒரு உண்மை சரிபார்க்கும் செய்தித்தளம் உண்மை சரிபார்ப்பு செய்திருந்த கட்டுரையும் நமக்கும் ரிவர்ஸ் சர்ச் மூலமாகக் கிடைத்தது.
கருப்புப்பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல் என்று ஜூலியன் அசாஞ்சே எதையும் வெளியிட்டுள்ளாரா என்று நாம் இணையத்தில் தேடியபோது அவ்வாறு எந்தவித முடிவும் நமக்குக் கிடைக்கவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு, அசாஞ்சே டிஓஐக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் கருப்புப்பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் பெயுர்கள் நினைவில் இல்லை என்றும் பிரத்யேக பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.
எனினும், இதுவரையில் குறிப்பிட்ட பெயர்களோ நபர்களைப் பற்றியோ ஜூலியன் அசாஞ்சே நேரடியாகப் பட்டியல் வெளியிட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2629872
மேலும், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான கருத்துக்கள் சமூகத்தில் அதிகரித்துக் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பதுக்கியிருந்த 5 லட்சம் கோடி கருப்புப்பணத்தை செல்லாக்காசாக்கிய பணமதிப்பிழப்பு என்று ஜூலியன் அசாஞ்சே பட்டியல் வெளியிட்டதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
BBC:https://www.bbc.com/tamil/india-46134783
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)